வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நடந்த நெல்லை சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமண்ய பால்சந்திரா முதலிடம் பெற்றார். 




தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.


இப்போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன்  உட்பட திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் 5 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 3 காவல் உதவி கண்காணிப்பாளர்கள், 9 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 3 திருநெல்வேலி மாநகர உதவி ஆணையர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 3 உதவி தளவாய்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் இன்சாஸ் (Insas) ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் முதலிடத்தையும், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா 2வது இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12வது பட்டாலியன் உதவி தளவாய்  ரவி  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.




அதே போன்று பிஸ்டல்(Pistol) (அல்லது) ரிவால்வர்(Revolver) ரக துப்பாக்கி சுடும்போட்டியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா  முதலிடத்தையும், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ்குமார் 2வது இடத்தையும், திருநெல்வேலி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9வது பட்டாலியன் உதவி தளவாய்  பூபதி  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா முதலிடத்தையும், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ்குமார் 2வது இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12வது பிரிவு பட்டாலியன் உதவி தளவாய்  பூபதி  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.




வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார்  பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  சுனைமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர். இந்நிகழ்வின்போது கமாண்டோ படை பிரிவின் காவல் கண்காணிக்காளர்  ஜே.பி. பிராகர் ஆகியோர் உடனிருந்தனர்.