2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து உள்ளார் என அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.




தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நடைபெறும் கூட்டமாக இருப்பதால் இது உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தான் இந்த கூட்டம். காரணம், கனிமொழி எம்.பி. இந்த தொகுதியில் 86,780 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழக முதலமைச்சர் தளபதியார் ஓராண்டுக்கு முன்பே திட்டமிட்டு செயல்பட்டு நமக்கு அறிவுரைகள் வழங்கினார். 




தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என இரண்டிலும் கழக வேட்பாளர்கள் வெற்றிக்காக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முழுமையாக பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் இந்த மாவட்டத்தில் 40 நாட்கள் எல்லா பகுதிகளுக்கும் சென்று கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டதால் எதிர்த்து நின்ற அத்தனை பேரும் டெபாசிட் இழந்தனர். இதற்கு அங்கீகாரம் கொடுத்தவர்களும் நீங்கள் தான். உங்களை மனதார பாராட்டுகிறேன்.


பிஜேபி ஆளும் மாநிலத்தில் கூட இப்படி நடைமுறை இல்லை. ஜெயலலிதா அறிவித்து நடத்திய அம்மா மருந்தகம், காய்கனி கடை போன்றவற்றை இந்த அரசு தடைசெய்யாமல் நல்ல திட்டம் என்பதால் தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்றைய தினம் கூட அம்மா உணவகத்தை முதலமைச்சர் ஆய்வு செய்து மேலும் விரிவுபடுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தூத்துக்குடி அருகே டைட்டல்பார்க் விரைவில் ஆரம்பமாக உள்ளது. கார் தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளன. ஒரு மாநில வளர்ச்சிக்காக கல்வி, தொழில், உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கி செயல்படுத்துவதால் பொருளாதார நிலை உயர்ந்து வருகிறது. முதல்வரின் முகவரியிலும், மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்திலும் எந்த குறைகள் தெரிவித்தாலும், அதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.




மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்,கனிமொழி எம்.பி. வெற்றி பெறுவதற்கு இந்த தொகுதியில் 1 லட்சத்து 3000 வாக்குகளை திமுக பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாம் வெற்றியை பெற்றுள்ளோம். 2026ல் இந்த மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். 3 ஆண்டு தளபதியார் ஆட்சியில் எல்லோருடைய குடும்பத்திலும் ஏதாவது ஒரு வகையில் அனைவரும் பயனடைந்துள்ளனர். இதையெல்லாம் நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 




இப்போது பெற்றுள்ள இந்த 40க்கு 40 வெற்றி எதிர்வரும் தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும். புதிதாக மாணவர்கள், இளைஞர்களை கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தேர்தல் கூட்டணியை தலைவர் பார்த்துக் கொள்வார். நாம் செய்ய வேண்டிய பணியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அரவணைத்து செல்வதன் மூலம் தான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். அதற்கான பணியை அனைவரும் இப்போதிலிருந்தே எந்த சூழ்நிலையிலும் தடம் மாறாமல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.