மதுரை கோட்டத்தில் வருவாயில் நான்காவது இடத்தில் இருக்கும் தூத்துக்குடியை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடிக்கு புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சென்னை, மைசூரு ஆகிய இரு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. ரயில்வே வாரியம் ஏற்கனவே ஒப்புதல் அளித்த 2 ரயில்களையும் இயக்காமல் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஓராண்டுக்கு மேலாக காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது கோடை சிறப்பு ரயில் இயக்கத்திலும் தூத்துக்குடி புறக்கணிக்கப்பட்டுள்ளது என அடுக்கடுக்கான புகார்களை தூத்துக்குடி பயணிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி இந்திய தொழில் வர்த்தக சங்கத்தினர், மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர் ஆகியோர் தெற்கு ரயில்வே மதுரை கூடுதல் கோட்ட மேளாளர் செல்வத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், 'தூத்துக்குடியில் இருந்து தினசரி மைசூரு, சென்னை ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. இந்த ரயில்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிகமாக காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி கூடுதலாக இரவு நேர ரயில் இயக்க வேண்டும். மேலும், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி காலையில் 'வந்தே பாரத்' ரயில் இயக்க வேண்டும்.
மேலும், காலையில் இயக்கப்படும் வண்டி எண் 056666 கொண்ட திருநெல்வேலி- தூத்துக்குடி- திருநெல்வேலி ரயிலின் பெட்டிகளை வைத்து தூத்துக்குடி- மதுரை இடையே பகல் நேர சிறப்பு ரயில் இருக்க வேண்டும். ரயில்வே வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய ரயில் மற்றும் திருநெல்வேலி - பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிப்பை விரைவாக இயக்க வேண்டும். வண்டி எண். 06125, 06126 திருச்சியில் இருந்து காலை புறப்படும் காரைக்குடி, வண்டி எண் 06885, 06886 மானாமதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்ம்நாயகம் கூறுகையில், "தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் வருவாயில் தூத்துக்குடி 4-வது இடத்தில் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் தூத்துக்குடி ரூ.31 கோடி அளவுக்கு ரயில்வேக்கு வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளது. ஆனால், தூத்துக்குடியை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 2 ரயில்கள் மட்டுமே தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிறது. அந்த ரயில்களும் பயணிகள் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழிகின்றன. புதிய ரயில், சிறப்பு ரயில், வந்தே பாரத் என எந்த ரயில் என்றாலும் திருநெல்வேலிக்கு தான் அறிவிக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து பயணிக்கும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள். தூத்துக்குடியில் போதுமான ரயில் வசதி இல்லாத காரணத்தாலேயே அவர்கள் திருநெல்வேலிக்கு சென்று ரயில்களில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு மற்றும் தினசரி ரயில் இயக்கினால் திருநெல்வேலி செல்லும் பயண நேரத்தையும் குறைக்கலாம், கூட்ட நெரிசலையும் குறைக்கலாம். பொதுமக்களின் சவுகரியத்தையும் ரயில் நிர்வாகம் கவனிக்க வேண்டும். தூத்துக்குடி பயணிகளின் கோரிக்கைகளுக்கும் ரயில்வே நிர்வாகம் செவி கொடுக்க வேண்டும்” என்றார்.