நெல்லையில் பிரதமர் மோடியை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் சிவன் கடவுளுக்கு இணையாக மோடியை சித்தரித்து போஸ்டர் ஒட்டியதற்கு இந்து முன்னணி பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளி மைதானத்தில் பாஜக சார்பில் வரும் 28ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பிரதமர் நெல்லை பொதுக்கூட்டத்துக்கு வருகிறார். குறிப்பாக முதல் முறையாக பிரதமர் மோடி நெல்லை மாவட்டத்துக்கு வர இருப்பதால் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்க பாஜகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் பிரதமரை வரவேற்று மாநகரம் முழுவதும் பாஜகவினர் ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை தெற்கு மாவட்ட பாஜகவின் கல்வியாளர் பிரிவின் மாவட்ட தலைவர் ஜெயதுரை பாண்டியன் சார்பில் பிரதமரை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் மோடியை சிவனுக்கு இணையாக சித்தரித்து வசனங்களை அச்சிட்டிருப்பது இந்து ஆர்வலர்கள் மற்றும் சிவ பக்தர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலான நெல்லை டவுண் நெல்லையப்பர் கோயில் அமைந்துள்ளது. ஜெயதுரை பாண்டியன் ஒட்டியுள்ள போஸ்டரில் எங்கள் நெல்லையப்பர் சாமியே வருக வெல்க வாழ்க என குறிப்பிட்டுள்ளார். நெல்லையப்பர் கோயிலும் நெல்லையப்பர் சாமியும் நெல்லையின் முக்கிய ஆன்மீக அடையாளமாக கருதப்படுகிறது. எனவே நெல்லையப்பர் கடவுளின் பெயரை பயன்படுத்தி பிரதமருக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகவின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் இந்து முன்னணியே இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக இந்து முன்னனி நெல்லை மாவட்ட பொது செயலாளர் பிரம்மநாயகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாளை நெல்லைக்கு வருகை தரும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை வரவேற்பதற்காக நெல்லை மாவட்ட பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் மோடி அவர்களை "எங்கள் நெல்லையப்பர் சாமியே வருக" என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. நெல்லை மண்ணை பாதுகாத்து அருள்பாலித்து வரும் அருள்மிகு சுவாமி நெல்லையப்பரை நரேந்திர மோடியோடு ஒப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது இது போன்று கடவுளோடு ஒப்பிட்டு புகழாரங்களை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் விரும்ப மாட்டார் என்பதை நாடறியும். பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை சித்தாந்தம் அறியாத நபர்களால் இது போன்ற செயல்கள் நடைபெறுவது வேதனைக்குரியது. எந்த அரசியல் கட்சியினர் இது போன்ற செயலில் ஈடுபட்டாலும் இந்துமுன்னணி பேரியக்கம் கண்டனம் தெரிவிக்கும். சுவாமி நெல்லையப்பர் பக்தர்களின் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள சுவரொட்டி மற்றும் பதாகைகளை பாரதிய ஜனதா கட்சி உடனடியாக அகற்றி அந்த நிர்வாகி மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார்.