தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தூத்துக்குடி அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்து வரவேற்றார். தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி மதிப்பிலான நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து பேசும்போது, "பெரு வெள்ளம், அதி கனமழை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய போது அமைச்சர்கள், அதிகாரிகளை அனுப்பி உடனே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம். அதனால் தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள்.




தூத்துக்குடி மாவட்டத்தில் அணைக்கட்டுகள், குளங்கள் மற்றும் வாய்கால்களில் 288 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் ரூ.66.45 கோடியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மூலம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரிசெய்யப்பட்டது. மேலும், இந்த உடைப்புகள் நிரந்தரமாக சரிசெய்ய ரூ.145.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்திலும், 802 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் ரூ.27.68 கோடி மதிப்பில் போர்க்கால அடிப்படையில் முதல் கட்டமாக உடனடியாக சரி செய்யப்பட்டது. நிரந்தரமாக சரிசெய்ய ரூ.15.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


நலத் திட்ட உதவிகளையும், நிவாரண உதவிகளை வழங்குவதை கடமையாக அதை ஏற்றுக்கொண்டு அத்தோடு நின்றுவிடாது, உங்களுடைய வாழ்க்கை மேம்படவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல சம்பளத்துடன் நல்ல கம்பெனிகளில் வேலை கிடைக்கவேண்டும். அந்த நோக்கத்தோடு, பல பெரிய நிறுவனங்களை இந்த பகுதிகளில் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். தற்போது கூட மின்சார கார் தயாரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். மேலும் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா பவர் நிறுவனம் ரூ.2800 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. இதனால் அந்த பகுதியைச் சார்ந்த 1800 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையொப்பமிட்ட சிங்கப்பூர் நாட்டின் செம்கார்ப் என்ற நிறுவனம் ரூ.36 ஆயிரம் கோடி முதலீட்டிலும், மலேசியாவின் பெரிய தொழில் நிறுவனமான பெட்ரோநாஸ் என்ற நிறுவனம் ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலும், தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்க இருக்கிறார்கள். இந்தத் தொழிற்சாலைகள் அமையும்போது, இந்தப் பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம். இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசிடம் ரூ.37 ஆயிரம் கோடி நிதியை நாம் கேட்டோம். மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்பது மட்டும் இல்லை, தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் மத்திய அரசும், நிதிஅமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள். நாம் இதை கேட்டால், 'உங்களிடம் சாதுரியம் இருந்தால் நீங்கள் சாதித்துக் கொள்ளலாமே' என்று மிகவும் ஆணவமாக அவர் பேட்டி அளித்திருக்கிறார். இது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகு அல்ல. எங்களிடம் சாதுரியம் இருப்பதால் தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டியிருக்கிறோம்.




உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவும் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். எங்களுடைய வளர்ச்சியைப் பார்த்துத்தானே அவர்கள் வருகிறார்கள். தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் திராவிட மாடல் அரசின் சாமர்த்தியம் தானே. மத்திய ஒன்றிய பாஜக. அரசின் இடைக்காலத் தடைகளையும் தாண்டி இந்த வெற்றியை பெற்று வருகிறோம். எத்தகைய இடர் வந்தாலும், யாரையும் எதிர்பார்த்து காத்திருக்காமல், மக்கள் பணியாற்றும் ஆட்சி தான் திமுக ஆட்சி. உங்களுக்காக களத்தில் இருக்கின்ற ஆட்சி தான், திமுக ஆட்சி. உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் இருப்பேன்" என்றார்.