14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 25 வருடம் கடுங் காவல் தண்டனை விதித்து நெல்லை சிறப்பு போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து, 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.


கடந்த 2020 ஆம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு என்ற கிராமத்தில் 14 வயது சிறுமியை சங்கர் என்ற மூர்த்தி (35) என்பவரும் மாரியப்பன் (32) என்பவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.




திருநெல்வேலி மாவட்டத்தையே உலுக்கிய இந்த வழக்கின் விசாரணை போக்சோ நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி சுரேஷ் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொடூரமான முறையில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே இரண்டு குற்றவாளிகளான  சங்கர், மாரியப்பன் ஆகியோருக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நெல்லை போக்சோ நீதிமன்றம் நீதிபதி சுரேஷ், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.


சிறுமி தரப்பில் அரசு வழக்கறிஞராக போக்சோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உஷா ஆஜரானார். போக்சோ வழக்குகளில் தொடர்ந்து கடுங்காவல் தண்டனைகள் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் போக்சோ நீதிமன்றத்தில் இந்த 25 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை விதித்த இந்த தீர்ப்பு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.