நேற்று அதிகாலை குவைத்  நாட்டில் உள்ள மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் உள்ள சமையலறையில் முதலில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தீயானது கட்டடம் முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கிறது. தீயின் தீவிரத்தை உணர்ந்த பலர், கட்டடத்தின் மாடியிலிருந்து கீழே குதித்தாகவும் கூறப்படுகிறது. சிலர் கட்டடத்திற்குள் மாட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டடத்தில் சுமார் 160 பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்துக்காக வேலை பார்ப்பவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 40 இந்தியர்கள் உட்பட 53 நபர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 


குவைத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் தீயில் கருகி உயிரிழந்ததாக கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வந்துள்ள தகவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு. இவர் பல ஆண்டுகளாக குவைத்தில் தங்கி சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் குவைத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் இறந்து போன கட்டிடத்தில் இவரும் தங்கி இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் தீ விபத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அங்கிருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்த தகவல்களால் ராமநாதபுரத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மனைவி குருவம்மாள் மகன் சரவணக்குமார் ஆகியோர் கதறி அழுதும் சோகம்  நிறைந்த காட்சி கிராம மக்களிடையேயும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய துணைத்தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை உடனடியாக விசாரணை நடத்தி  அவரது உடலை தாயகம் கொண்டு வரவும், உரிய இழப்பீடு பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் .