கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பொலிவிழந்து காணப்பட்ட பூச்சு விளாகம் அரசு பள்ளியை இளைஞர்கள் சுத்தம் செய்து புனரமைத்ததையடுத்து, கட்டிடத்தை காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.




கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி அருகாமையில் பூச்சிவிளாகம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி கட்டிடம் வர்ணம் இழந்து பாசி படர்ந்த நிலையில் காணப்பட்டதால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் சிரமம் அடையும் சூழல் நிலவியது.




இதனை குமரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் 20க்கு மேற்பட்டோர் ஒன்றிணைந்து புனரமைத்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே அரசு பள்ளிக்கூட கழிப்பறைகள், மலையோர மக்களுக்கு குடியிருப்பு போன்ற பல சமூக சேவைகளை தங்கள் படிப்பிற்கான நேரம்போக மீதமுள்ள நேரங்களில் ஒன்றிணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.




அந்த வகையில் பூச்சிவிளாகம் அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் என திட்டமிட்டு தங்கள் குடும்பத்தாரின் உதவியோடு பணத்தை சேமித்து 16 நாட்களாக 20 மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக  அப்பள்ளி  வர்ணம் பூசி சீரமைக்கப்பட்டுள்ளது. 




இதனை மாவட்ட காவல் கண்கணிப்பளர் சுந்தரவதனம் பார்வையிட்டு திறந்து வைத்தார். அவரை மாணவ, மாணவிகள் மலர் கொடுத்து வரவேற்ற நிலையில் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஊக்கப்படுத்தினார். பள்ளிக்கூடத்தை புது வர்ணம் பூசி சீரமைத்த இளைஞர்களை அப்பகுதியினரும்,  பள்ளிக்குழந்தைகளின் பெற்றோரும் பாராட்டினர்.