தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழை காரணமாக மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயத்தாறு, கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் வேகமாக நிரம்பியது. இதனால் குளத்தில் உள்ள 24 கண் மதகு திறக்கப்பட்டது. இதனால் உப்பாற்று ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.




ஆனாலும் கோரம்பள்ளம் குளத்தில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தின் தண்ணீர் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள பாலம் வழியாக பாய்ந்து ஓடியது. இதில் அந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தொடர்ந்து மறவன்மடம், அந்தோணியார்புரம், சோரீஸ்புரம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக மாநகருக்குள்ளும் புகுந்தது. இந்த வெள்ளத்தால் மாநகரம் கடந்த 6 நாட்களாக தத்தளித்துக் கொண்டு உள்ளது.




தூத்துக்குடியில் பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. முத்தம்மாள்காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், நிகிலேசன் நகர், புஷ்பாநகர், கதிர்வேல் நகர், ராஜீவ்நகர், தபால் தந்தி காலனி, ஸ்டேட் வங்கி காலனி, இந்திராநகர், போல்டன்புரம், கால்டுவெல்காலனி, கோயில்பிள்ளை நகர், தெர்மல்நகர், தாளமுத்துநகர் வண்ணார் பேட்டை, டி.சவேரியார்புரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் படகு, பரிசல்கள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


இது ஒரு புறம் இருக்க தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து கிழக்குப் பகுதி குறிப்பாக இரண்டாம் கேட், மட்டக்கடை, அழகேசபுரம், குரூஸ்புரம், தாமோதரநகர் சண்முகபுரம், குரூஸ்புரம் உள்ளிட்ட பகுதிகள் கடற்கரைக்கு மிக அருகில் இருந்தாலும் கூட கடந்த 17, 18 ஆம் தேதிகளில் பெய்த அதிக கன மழை காரணமாக அதிகளவு பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு பகுதி தான் முன்பாக தூத்துக்குடி நகராக இருந்தது.


அதன் உள்கட்டமைப்பு கழிவுநீர் கால்வாய்கள் போன்றவை நேர்த்தியாகவும் பக்கிள் ஓடையில் சென்று கலக்கும் வகையில் வாட்டமாகவும் அமைக்கப்பட்டு இருந்ததால் இந்த பாதிப்பு ஏற்படவில்லை. கனமழையின் போது ஓரளவு தண்ணீர் கட்டினாலும் கூட உடனடியாக மழை நீர் வடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் 1992களில் உருவாக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளான முத்தம்மாள் காலனி ஆதிபராசக்தி நகர் மச்சாதுநகர், தபால்தந்தி காலனி, ராஜீவ் நகர் கதிர்வேல் நகர், 1980 களில் விரிவாக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தான் எப்போது மழை பெய்தாலும் ஆண்டுதோறும் மழை வெள்ளம் வெளியேற இயலாத ஒரு சூழல் உள்ளது.


இது குறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த பொறியாளர் ஜான்சனிடம் கேட்டபோது, தூத்துக்குடியில் மாநகராட்சியை பொருத்தவரை விரிவாக்கப்பட்ட பகுதிகளில் முறையாக நீர் மேலாண்மை இல்லாதது கழிவு நீரோடை அமைக்காதது போன்றவையே இந்த துயரத்துக்கு தொடர் காரணமாக இருந்து வருகிறது என கூறும் அவர் இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கழிவு நீரோடை வாட்டத்துடன் அமைத்து மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தூத்துக்குடி பக்கிள் ஓடையை ஆழப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது தூர்வாரினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்கிறார்.