Thoothukudi Salt: தூத்துக்குடி ஏற்பட்டுள்ள உப்பு பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, குஜராத்திலிருந்து 40 ஆயிரம் டன் உப்பை இறக்குமதி செய்ய உள்ளது.
தூத்துக்குடியில் சரிந்த உப்பு உற்பத்தி:
உப்பு உற்பத்தி தொழிலில் தமிழ்நாட்டின் தலைநகராக தூத்துக்குடி திகழ்கிறது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. குஜராத்திற்கு அடுத்தபடியாக நாட்டில் அதிகம் உப்பு உற்பத்தி செய்யும் பகுதியாக தூத்துக்குடி உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு உற்பத்தியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவு காரணமாக, தூத்துக்குடியின் தொழில்துறை வரலாற்றில் முதல் முறையாக, குஜராத்திலிருந்து 40,000 டன் உணவுக்கான உப்பை அங்குள்ள வர்த்தகர்கள் இறக்குமதி செய்துள்ளனர். உற்பத்தி 60% குறைந்துள்ளதால், குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
உற்பத்தி சரிய காரணம் என்ன?
தூத்துக்குடி கடற்கரையில் பருவம் தவறி பெய்த மழை மற்றும் பல வானிலை சூழல் காரணமாக போதுமான வெயில் நாட்கள் இல்லாததால் உப்பு உற்பத்தி சரிந்ததாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கடந்த வாரம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை அடைந்தது. வழக்கமாக உப்பு நீர் உப்புத் தொட்டிகளில் ஆவியாக விடப்பட்ட பிறகு மழை பெய்தால், மழைநீர் உப்புநீரை நீர்த்துப்போகச் செய்து உப்பு விளைச்சல் குறையும். அந்த வகையில் தான் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அவ்வப்போது பெய்த மழை உற்பத்தியை பாதித்ததாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதன்படி, கடந்த ஆண்டு உற்பத்தியில் 40 சதவிகிதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 2023 வெள்ளத்தின் தாக்கமும், 2024 இல் வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையுமே உப்பளங்களை சேதப்படுத்தியதால் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
வரலாற்றில் முதல்முறை:
பருவநிலை மாற்றம் காரணமாக தூத்துக்குடியில் மழைப்பொழிவு மாறிவிட்டதாகவும், உப்பு உற்பத்தியின் முக்கிய பருவம் தற்போது சீர்குலைந்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பல்வேறு வகையான தொழில்துறை உப்புகள் குஜராத்தில் இருந்து ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் உணவுக்கான உப்பை இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். உற்பத்திச் செலவு டன்னுக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை இருந்தால் மட்டுமே மாவட்டத்தின் உப்புத் தொழிலை மீண்டும் தொடங்க முடியும் என்றும், காலநிலை காரணிகளும் மாவட்டத்தின் உப்பு உற்பத்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எகிறிய உப்பு விலை
உப்பின் உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளதால் அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு சில உற்பத்தியாளர்களிடம் இன்னும் உப்பு கையிருப்பு இருந்தாலும், ஒரு டன் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. வழக்கத்தை காட்டிலும் இது மிகவும் அதிகம் என்று உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். குஜராத்தில் இருந்து ஒரு டன் உப்பை ரூ.4,000 முதல் ரூ.4,500 வரையிலான விலையில் வாங்க முடியும் என கூறப்படுகிறது. விலை மிக அதிகமாகவும், போட்டித்தன்மையற்றதாகவும் இருப்பதால், தூத்துக்குடியிலிருந்து பிற நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி பாதிப்பு:
தூத்துக்குடி பாரம்பரியமாக தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களுக்கும் மசாலாப் பொருட்களை வழங்கும் முக்கிய நகரமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோக இலங்கை, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், குஜராத் மற்றும் ஆஸ்திரேலியாவிடம் இருந்து ஏற்பட்ட போட்டியால், தூத்துக்குடியிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அளவு கணிசமாக சரிந்துள்ளது. தற்போது காலநிலை மாற்றத்தில் உள்நாட்டு தேவைக்கே உற்பத்தி செய்ய முடியாத நிலையை தூத்துக்குடி எட்டியுள்ளது.