புத்தக திருவிழா, இலக்கியத்திருவிழா நடத்துவதுடன் படைப்பாளிகளை தேடி கண்டுபிடித்து கவுரவித்து வருவதன் மூலம் தமிழகத்தில் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு திமுக அரசு பெருமை சேர்கிறது என நெல்லையில் 7- வது பொருநை புத்தகத்திருவிழாவைத் தொடங்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு.




அரசு மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 7- வது பொருநை புத்தகத் திருவிழா நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில் மாநகராட்சி ஆணையர் தாக்ரேசுபம் ஞானதேவராவ் தலைமையில் நடைபெற்றது . இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில் ”தமிழகத்தின் வரலாறு, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை அனைவரும் குறிப்பாக இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் முதல்வர் அவர்கள் மாவட்டம் தோறும் புத்தகத்திருவிழா நடத்த உத்தரவிட்டு நடத்தப்பட்டு வருகிறது . தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோர்தான் பெண்கல்விக்கு வித்திட்டவர்கள்.




தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்வெளி ஆராய்சி மையம், அணு ஆராய்ச்சி சோதனை மையங்களில் பணியாற்றி வருகின்றனர். அதிகமான புத்தகங்களை வாசிக்க வாசிக்க இதுபோன்ற துறைகளில் பணியாற்றலாம், விஞ்ஞானிகளாக உருவாகலாம், எனவே மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்காகவே புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. படைப்பாளிகள், எழுத்தாளர்களக தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு வீடு, பொற்கிளி உள்ளிட்ட நல உதவிகளை முதல்வர் வழங்கி கவுரவப்படுத்தி வருவதுடன் புத்தக கண்காட்சி இலக்கியத்திருவிழா நடத்தி தமிழகத்தின் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு திமுக அரசு பெருமை சேர்த்து வருகிறது என்றார். மேலும் பேசுகையில் சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் 915 அரங்குகள் அமைக்கப்பட்டு 15 கோடி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, நெல்லையில் கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டு 3 லட்சம் பேர் பார்வையிட்டதுடன், 3 கோடி ரூபாய்க்கு புத்தகம் விற்பனையாகி உள்ளது. இந்த ஆண்டு இந்த புத்தக கண்காட்சியை 5 லட்சம் பேர் பார்வையிட வேண்டும் , 5 கோடி ரூபாய்க்கு புத்தகள் விற்பனையாக வேண்டும் எனவே அனைவரும் புத்தக கண்காட்சிக்கு வாருங்கள்” என கேட்டுக் கொண்டார்.




இதனைத்தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் பேசுகையில் ”தமிழகத்தில் புத்தகத் திருவிழா அனைத்து நதிகளின் பெயர்களிலும் நடத்தப்பட்டு வருகிறது இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மிக்க உறுதுணையாக இருந்து வருகிறார் வாசிக்கும் பழக்கத்தையும் பேச்சாற்றலை வளர்த்து கொள்ளவே புத்தக திருவிழா நடத்துவதன் நோக்கமாகும். வாசிக்க வாசிக்க மனம் பண்படுவதுடன் படைப்பாளிகளாவும் மாறலாம். எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் தமிழக அரசு பெருமைப்படுத்தி வருகிறது” என கூறினார். நெல்லை புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது சுமார் ஒரு லட்சம் புத்தகத்திற்கு மேல் இடம்பெற்றுள்ளன. மேலும் வாசகர்களையும், மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தினமும் மாலையில் புத்த வெளியீடு, கலை நிகழ்சி, ஆகியவைகள் நடத்தப்படுகிறது . இந்த கண்காட்சி 13- ந்தேதி வரை நடக்கிறது . இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.