தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுகாதார மாவட்டம் நாகலாபுரம் அரசு மருத்துவமனை 1971-ஆம் வருடம் துவக்கப்பட்டது. நாகலாபுரத்தை சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் மருத்துவ வசதிபெறும் வகையில் கட்டப்பட்டது. இப்பகுதி மிகவும் பின்தங்கிய விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் முன்னுரிமை அடிப்படையில் அரசு உதவி வருகிறது. தினந்தோறும் நூறுக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்மருத்துவமனையை தமிழக அரசு கடந்த 2005-ஆம் ஆண்டு சுமார் முப்பது படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தியது. இம்மருத்துவமனைக்கு தமிழக அரசு புதிய தொழில்நுட்ப வசதிகள் உடைய மருத்துவ உபகரணங்களை வழங்கி உள்ளது. இங்கு சுமார் ஐந்து மருத்துவர்கள் வரை பணிபுரிந்தனர். ஆனால் தற்போது கூடுதல் பணிக்காகவும், மேல் மருத்துவ படிப்பிற்காகவும் சென்றுவிட்டதால் ஒரேயொரு மருத்துவர் மட்டுமே பணிபுரிகிறார். போதிய மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் அவசர சிகிச்சைக்காக மாலை மற்றும் இரவு நேரங்களில் சிகிச்சை பெற முடியவில்லை. அவசர சிகிச்சைக்கு வரக்கூடிய மக்களை முதலுதவி கூட செய்யாமல் கோவில்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் நிலங்களில் பணிபுரியும்போது விஷ ஜந்துக்கள் கடித்து சிகிச்சைக்கு வந்தால் மருத்துவ வசதி இல்லை என வந்தவர்களிடம் கூறி கோவில்பட்டி, அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறி விடுகின்றனர். தேள் கடி மருந்து கூட இங்கு இருப்பு இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தவிர மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் 53 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தவிர மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் மற்றும் புழக்கத்திற்காக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திறந்த வெளிக்கிணறு அமைக்கப்பட்டது. தற்போது இக்கிணறு பயன்பாட்டில் இல்லை. இக்கிணற்றின் அருகே சில மாதங்களுக்கு முன் மத்திய ஆய்வுக் கூடம் கட்டப்பட்டது. இவ்வாய்வு கூடத்திற்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்கின்றனர்.. திறந்தவெளியில் கிணறு உள்ளதால் ஏதாவது அசம்பாவிதம் நேரிடக்கூடாது. இக்கிணற்றுக்கு மூடி போட வேண்டும். புதிதாக கட்டப்பட்டுள்ள மத்திய ஆய்வுக்கூடத்திற்கு இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளை கடந்து செல்லவேண்டியுள்ளது. எனவே பயனற்ற நிலையில் உள்ள பழமையான கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகத்திற்குள் பழைய கட்டிடங்களை இடிக்கவும், திறந்த வெளி கிணற்றுக்கு மூடி போடவும், போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்கிறார் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன்