தொழிலக பாதுகாப்பு இயக்குனரகம் ஆலையில் ஆய்வு நடந்து வருவதாகவும் அதன் பின்பு எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரியவரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் பேட்டி.




தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதி எதிரே மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமான நிலா சீ புட்ஸ் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.




இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அந்த ஆலையில் மின் விபத்து ஏற்பட்டு அம்மோனியா வாயு கசிந்து விபத்துக்குள்ளானதாகவும் இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவி அங்கு பணியில் இருந்த 30 பேருக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.




பின்னர், உடனடியாக மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மனோ பிரசன்னா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து, நிலா சீ புட்ஸ் நிறுவன வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள மூன்று தனியார் மருத்துவமனையான ஏவிஎம் மருத்துவமனை மற்றும் ராஜேஷ் திலக் மருத்துவமனை மற்றும் அருள்ராஜ் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிப்காட் தீயணைப்பு துறையினர்  தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டபர்களை மீட்க சென்ற போது அதில் ஓர் தீயணைப்பு வீரர் வெங்கடசாமி என்பவரும் மயக்கமடைந்த நிலையில், ஆக மொத்தம் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார்  விசாரணை நடத்திய நிலையில், மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் முரளி தலைமையிலான அதிகாரிகள், தடய அறிவியல் உதவி இயக்குனர் கலா லெட்சுமி, தலைமையிலான கைரேகை நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் தேவ சுந்தரம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், ஆகியோர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.மேலும், நிலா சீ புட்ஸ் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு ஆலையின் மெயின் கதவு மூடப்பட்டுள்ளது.




இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை தூத்துக்குடி, மில்லர்புரம் பகுதியில் அமைந்துள்ள ராஜேஷ் திலக் மருத்துவமனையில் தொழிலாளர்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சமூக நலன் மற்றும் மகளிர்த்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் அதிகாரிகள் நலம் விசாரித்தனர்.




இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வெ கணேசன், நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் நேற்று இரவு 11 மணியளவில் மீன் கசிவு ஏற்பட்டு புகை மண்டலம் ஏற்பட்டது... இதில், தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். அப்போது, அதிக புகை காரணமாக மயக்கம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக மூன்று தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 8 பேர் குணமடைந்து வீட்டிற்க்கு  சென்ற நிலையில் மீதம் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் குணமடைந்து இன்று மாலை அல்லது நாளை காலை விடுவிக்கப்படுவார்கள்.




மேலும்,  ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. தொழிலாளர் நலத்துறை சார்பில் முழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், முறையாக தொழிலாளர்களுக்கு ஆலையில் பாதுகாப்பு அளித்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இதில், 16 பெண்கள் ஒரிசா மாநிலம், 2 பெண்கள் அசாம், மீதம் உள்ளவர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்றார்.


இதனைத்தொடர்ந்து, விபத்து ஏற்பட்ட மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமைச்சர்கள் கீதாஜீவன், C.V கணேசன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்..