தூத்துக்குடியில் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு; 30 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமான நிலா சீ புட்ஸ் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அந்த ஆலையில் மின் விபத்து காரணமாக அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதில், அங்கு பணியில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் என 29 பேருக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
பின்னர், உடனடியாக சிப்காட் காவல் நிலைய தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். இதைத்தொடர்ந்து, நிலா சீ புட்ஸ் நிறுவன வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையான ஏவிஎம் மருத்துவமனை மற்றும் ராஜேஷ் திலக் மருத்துவமனை மற்றும் அருள்ராஜ் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு பெண் ஊழியர்களுக்கு சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் முரளி தலைமையிலான அதிகாரிகள், தடய அறிவியல் உதவி இயக்குனர் கலா லெட்சுமி, தலைமையிலான கைரேகை நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் தேவ சுந்தரம், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சிப்காட் தீயணைப்பு துறையினர் தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டபர்களை மீட்க சென்ற போது தீயணைப்பு வீரர் வெங்கடசாமி என்பவரும் மயக்கமடைந்த நிலையில், ஆக மொத்தம் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் தனியார் மீன் பதன ஆலையில் அமோனியா கேஸ் வெளியாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து 30 பேர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும், தூத்துக்குடி அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட நிலா சீ புட் ஆலையில் கடந்த ஜூன் 5, 2014 ஆம் ஆண்டு இதே போன்று வாயு கசிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 54 தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் அலட்சியம் ?
தொழிற்சாலையை ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணமாகவும் அவர்கள் முறையாக ஆய்வு செய்யாததன் விளைவாகவுமே மீண்டும் இந்த மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதியின் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது இன்னும் அதிகரித்திருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை கூட ஏற்பட்டிருக்கும் என்றும், பணியாளர்களுக்கு பாதிப்பு மட்டுமின்றி அருகே உள்ள குடியிருப்புகளுக்கு வாயு கசிந்தால் என்ன ஆவது என்ற கேள்வியும் இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு உயர் அதிகாரிகளும், தொழில்துறை சார்ந்த அலுவலர்களும் இந்த வாயு கசிந்தா விவகாரத்தில் சமரசமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.