மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கனிமொழி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி, கரிசல்குளம், பசுவந்தனை சாலை - பாரதிநகர், ஏ.வி.பள்ளி அருகில், கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு, காமராஜர் சிலை அருகில், வேலாயுதபுரம் கூட்டுறவு வங்கி அருகில், புதுக்கிராமம், பங்களா தெரு (கடலையூர் சாலை), ஜோதிநகர் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.




அப்போது பேசிய கனிமொழி,இந்த தேர்தலிலே நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆளக் கூடிய பிஜேபி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான, பெண்களை இழிவுபடுத்தக் கூடிய வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அவர்களின் அடிப்படைக் கொள்கை. ஆனால் கேட்டால் சொல்லுவார்கள், நாங்கள்தான் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டுவந்தோம் என்று சொல்லுவார்கள். ஆனால் அது எப்படி தெரியுமா? நாமும்தான் உள்ளாட்சி மன்றங்களில் 50% இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி மறு சீரமைப்பு செய்து அதன் பிறகு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பார்களாம். இதெல்லாம் எப்போது நடக்கும்? இதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றி நாங்கள் பெண்களுக்காக இட ஒதுக்கீடு கொண்டுவந்து விட்டோம் என்று சொல்லி பெண்களை ஏமாற்றுகிறார்கள்.




பாஜக எம்பிக்கள் 44 பேர் மீது பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு எத்தனை அநீதிகள் இழைக்கப்பட்டன. ஒரு நாளாவது மோடி மணிப்பூர் சென்று அங்கே பெண்களை சந்தித்து, ‘நான் இருக்கிறேன்’ என்று ஆறுதல் சொல்லியிருக்கிறாரா?. அவரது ஆட்சி கார்ப்பரேட்டுக்கான ஆட்சி. கடன் ரத்து என்று விவசாயிகள் கேட்டால், மாணவர்கள் கேட்டால் அதை கண்டுகொள்ள மாட்டார். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். 2 கோடி வேலை வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டால் கண்டுகொள்ள மாட்டார். திமுக-காங்கிரஸ் அரசு கொண்டுவந்த 100 நாள் வேலைத் திட்டத்தை மூடும் அளவுக்கு சென்றுவிட்டார்.




மோடி நடத்துவது சாதாரண மக்களுக்கான ஆட்சி அல்ல. அதானி, அம்பானிகளுக்கான ஆட்சி. ஆனால் சாதாரண மக்களுக்கான 100 நாள் திட்டத்துக்கான நிதியை பெருமளவு குறைத்து, அதை முடக்கி விட்டார் மோடி. திமுக-காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதாலேயே அதை முடக்கிவிட்டார். இதனால் இப்போது 100 நாள் வேலையும் கிடைப்பதில்லை, 20 நாள் கிடைத்தால் கூட சம்பளமும் கொடுப்பதில்லை.இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். சம்பளம் 400 ரூபாயாக உயர்த்தப்படும். நம்முடைய முதலமைச்சர் அண்ணன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தினார். இப்போது ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உதவித் தொகை வழங்கி வருகிறோம். சிலருக்கு விடுபட்டிருந்தாலும் தேர்தல் முடிந்ததும் மீண்டும் முகாம்கள் நடத்தி விடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஆதரவற்ற பெண்களுக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். ஆக அதுவும் பெண்களுக்கு கிடைக்கும்.எனவே நமக்கான ஆட்சி ஒன்றியத்தில் அமைய வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.