அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜக இந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டிணம், மெஞ்ஞானபுரம், பரமக்குறிச்சி, பிச்சிவிளை, நா.முத்தையாபுரம், கீழநாலுமூலைக்கிணறு, நடுநாலுமூலைக்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுட்டார். அவருக்கு இண்டியா கூட்டணி கட்சியினர் சார்பில் மேள தாளம் முழங்க, வான வேடிக்கைகளுடன் மலர் தூவியும், பொன்னாடை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது நா.முத்தையாபுரம், கீழநாலுமூலைக்கிணறு, நடுநாலுமூலைக்கிணறு பகுதிகளில் உள்ள அம்பேத்கர் திரு உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து அப்பகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த அவர் அண்ணல் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் பாஜகவினரை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர் ஒன்றியத்தில் இண்டியா கூட்டணி தலைமையிலான ஆட்சி உருவாக வேண்டும் என்பதை மனதில் கொண்டு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் பாஜக இதுவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடியின் ஆட்சியை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் பாஜக அரசியல் செய்து மக்களை பிரித்து கலவரத்தை உருவாக்கி குளிர்காயக்கூடிய ஆட்சியாக உள்ளதாக கடும் விமர்சனம் செய்தார். மேலும் மணிப்பூரில் இரண்டு பெண்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொடுமைப்படுத்தி அவமானப்படுத்தி இழுத்துக்கொண்டு வந்தார்கள். மோடி அந்த பெண்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை இதுதான் மோடி அரசின் சாதனை என விமர்சனம் செய்தார்.
மேலும், மழை வெள்ள காலத்தில் தமிழகத்தில் வந்து பார்க்கவும் இல்லை ஒரு ரூபாய் நிதி உதவி கூட அளிக்கவில்லை ஆனால் தற்போது வாரத்தில் 4 நாட்கள் தமிழகத்தில் தான் உள்ளார் என்றும் தமிழகத்தில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிடலாம் என வரருகிறார் என்றும் நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.