தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைச் சுற்றியுள்ள மடத்தூா், மீளவிட்டான், பண்டாரம்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, சில்லாநத்தம், நடுவக்குறிச்சி, சங்கரபேரி,தெற்கு வீரபாண்டியபுரம், குமாரரெட்டியாபுரம் ஆகிய பல்வேறு கிராம மக்கள், மாவட்ட கூடுதல் ஆட்சியா் சரவணனிடம் அளித்த மனுவில், நான்கு ஆண்டுகளாக மூடிய நிலையில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதேபோல, தூத்துக்குடி சகாயபுரம், மட்டக்கடை, லூா்தம்மாள்புரம், மாதவன்நாயா் காலனி, திரேஸ்புரம், மினி சகாயபுரம், மாதாகோவில் தெரு, லயன்ஸ்டோன், குருசாமி புரம், குருஸ் புரம், தெற்கு கடற்கரை சாலை தெரு,, கணேசபுரம் ராமா் விலை தேவேந்திர குல வேளாளா் சங்கத்தை சோ்ந்தவா்கள் என அனைத்து தரப்பினரும் ஸ்டொ்லைட் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தனியே மனு அளித்தனா்.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அரசாணை பிறப்பித்து இழுத்து மூடப்பட்டது. இந்நிலையில் சமீபகாலமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்களும் கிராம மக்களும் மனு அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாமிநத்தம் தெற்கு சிலுக்கன்பட்டி, பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாத்திமாநகர் பகுதி பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் போராட்டத்தையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த திடீர் போராட்டம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடையே பேசுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இழுத்து மூடிய இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் இறங்கி உள்ளது. கல்வி உதவி, வேலை உதவி, உணவு, வீடு கட்டுமான உதவி என பல்வேறு பல பெயர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. எனவே ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடி நகரில் உள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருக்கும் படி கூறி பணம், அரிசி உள்ளிட்டவைகளை வழங்கி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த கோரியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும் நேற்றிரவு பாத்திமாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் மனுவினை அளித்தனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வருவதாகவும் இதனால் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு துணைபோகும் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.