தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் நடந்தது ஆணையர் சாருஸ்ரீ துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் சிறப்பு தீர்மானத்தை அறிவித்தார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. முத்துநகர் பூங்காவில் உள்ள கடைகளுக்கு டெண்டர் விடும் தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 28 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.




கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். திருச்செந்தூர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். குறிப்பாக கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்ற விழா நேரங்களில் பாதயாத்திரை பக்தர்கள் அதிகம் செல்கின்றனர். மதுரைக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். திருச்செந்தூருக்கு 10 லட்சம் பக்தர்கள் வந்தால் அதில் 5 லட்சம் பேர் தூத்துக்குடி வழியாக தான் செல்கின்றனர்.




இந்த பாதயாத்திரை பக்தர்கள் இரவு நேரத்தில் நடப்பதில்லை. சாலை ஓரங்களில் ஓய்வெடுப்பார்கள். அவர்களது வசதிக்காக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஓய்வுக்கூடம் ஒன்று அமைக்கப்படும். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானா பகுதியில் உப்பாறு ஓடையை ஒட்டி மாநகராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் பாதயாத்திரை பக்தர்கள் இரவு நேரங்களில் தங்கி செல்ல அனைத்து வசதிகளுடன் ஓய்வுக்கூடம் அமைக்கப்படும். இங்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, குளியலறை, மின் விளக்குகள், போலீஸ் பாதுகாப்பு போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்படும். மேலும், அருகே உப்பாற்று ஓடை அமைந்துள்ளதால் பூங்காவும் ஏற்படுத்தப்படும் என்றார் மேயர்.



 


தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறும்போது, ஆஷ் நினைவு மண்டப புனரமைப்பு பணிகள் 2019-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணியாகும். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தேர்வு செய்ய ஒரு குழு உள்ளது. அந்த குழு தேர்வு செய்து தான் இந்த பணி நடைபெறுகிறது. ஆஷ் நினைவு மண்டபம் 1911-ம் ஆண்டு கட்டப்பட்டது. மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. அந்த வகையில் தான் அங்கு சில பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சிலர் அரசியல் காழ்புணர்ச்சியோடும், முழுமையான உண்மை தெரியாமலும்  வேண்டுமென்றே தவறான கருத்துக்களை பரப்பி விடுகின்றனர். தொடர்ந்து இதுபோன்று மாநகராட்சிக்கு எதிராக அவதூறு பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.




பாலித்தீன் பைகள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதுதொடர்பாக மாமன்ற உறுப்பினர்களும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி சார்பில் 5 லட்சம் மஞ்ச பைகள் தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாசு இல்லா நகரமாக தூத்துக்குடியை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.




மாநகராட்சி பகுதியில் தனியார் இடங்களில் உள்ள கருவேல மரங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்தால் தூத்துக்குடியில் மழைநீர் தேங்காது என்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் தலா மூன்று மஞ்சள் பைகள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண