Diamond surprise: விறகு எடுக்க போனேன்... வைர கல்லோடு வந்தேன்.. குஷியோடு பாடும் பழங்குடி பெண்


வாழ்க்கை என்பது நமக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது. எது எப்போது யாருக்கு எதற்கு நடைபெறும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. அப்படி பட்ட ஒரு அதிசயம் நிகழ்வு தான் மத்திய பிரதேசத்தில் விறகு சேகரித்து பிழைக்கும் ஒரு பெண்மணியின் வாழ்வில் நடைபெற்று உள்ளது. வைர சுரங்கங்களுக்கு புகழ் பெற்ற மத்திய பிரதேசத்தின் பன்னாவில் ஒரு ஏழை பழங்குடி பெண் ஒரு விலையுர்ந்த வைர கல்லை கண்டெடுத்துள்ளார். 


மத்திய பிரதேசத்தில் உள்ள புருசோத்தம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கெண்டாபாய் என்ற பழங்குடி பெண், பன்னா எனும் இடத்தில உள்ள காட்டு பகுதியில் விறகு சேகரித்து அதை விற்று அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு தான் தனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார். 



வாழ்க்கை மாறிய தருணம் :


எப்போதும் போல் புதன்கிழமையும் அந்த பழங்குடி பெண் விறகு சேகரிப்பதற்காக காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த போது அவர் இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் பளபளப்பாக ஒரு கல் கிடந்ததை அவர் கவனித்துள்ளார். அதை உடனடியாக அரசாங்கத்தால் நடத்தப்படும் வைர அலுவலகத்திற்கு சென்று அங்கிருக்கும் அரசு அதிகாரிகளிடம் அவர் கண்டுபிடித்த எடுத்த கல்லை கொடுத்துள்ளார். அந்த கல்லை பரிசோதித்த அரசாங்க அதிகாரி அது விலைமதிப்பற்ற 4.39 காரட் வைர கல் என்பதை அந்த பெண்ணிற்கு தெரிவித்தார். 


பழங்குடி பெண் கண்டெடுத்த வைர கல்லை அரசு அதிகாரி பெற்று கொண்டார். மேலும் அந்த ஏலத்தில் விடப்படும். அரசாங்கத்தின் ராயல்டி மற்றும் வரிகள் தொகையை கழித்த பிறகு மீதி பணம் அந்த பெண்ணிடம்  வழங்கப்படும். அந்த வைர கல்லின் மதிப்பு சுமார் ரூ.20-25 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என வைர கல்லை ஆய்வு செய்த ஆய்வாளர் அனுபம் சிங் தெரிவித்துள்ளார். 


பல அதிர்ஷ்டமான நிகழ்வுகள் :


இது போன்ற அதிர்ஷ்டமான நிகழ்வு பல நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செங்கல் சூளை நடத்துபவர் ரூ.1.2 கோடி மதிப்புள்ள 26.11 காரட் வைரத்தை கண்டு எடுத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நான்கு தொழிலாளிகள் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களிடம் ஏழு விலைமதிப்பற்ற வைரங்கள் அவர்களுக்கு கிடைத்தது முதல் அவர்களின் தலை எழுத்தே மாறிவிட்டது. 


மத்திய பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள பன்னா பகுதி வைரங்கள் சுரங்கம் மட்டுமல்லாமல் புலிகள் காப்பகத்திற்கும் பெயர் போனது. 


அதிர்ஷ்டம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டும் என்றாலும் வரலாம். அதை யாராலும் கணித்து விடவே முடியாது. அதனால் யாரும் எந்த ஒரு நிலையிலும் மனம் தளராமல் அவர்களுடைய பணிகக்ளை முழுமனதோடு செய்ய வேண்டும்.