ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 10,500 சதுர கி.மீ. பரப்பளவை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயர்கோள காப்பகமாகமத்திய அரசு கடந்த 1989ம் ஆண்டு அறிவித்தது. இதற்கு யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகாரம் அளித்தது. இந்த பகுதி உலக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் உயிர்ப் பல்வகைமைகளுக்குப் புகலிடமாக விளங்குகிறது. இங்கு 4,223 கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அழிந்து வரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் அடங்கும். பவளப் பாறைகளை பொறுத்தவரை பாம்பனில் இருந்து தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 560 சதுர கி.மீ. பரப்பளவில் தான் அதிகம் காணப்படுகின்றன.எனவே, இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய பூங்காவாக தமிழக அரசு அறிவித்தது. 21 தீவுகளை உள்ளடக்கியதாக இந்த தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது.


                         

இந்த பூங்காவின் முக்கிய அங்கமாக விளங்குபவை இங்குள்ள வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு, நல்ல தண்ணி தீவு, ஆனையப்பர் தீவு,வாலிமுனை தீவு, அப்பா தீவு,பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு,சிங்கில் தீவு ஆகிய இந்த 21 தீவுகளும் தான். இதில், தூத்துக்குடி குழுவில் 4 தீவுகள், வேம்பார் குழுவில் 3 தீவுகள், கீழக்கரை குழுவில் 7 தீவுகள், மண்டபம் குழுவில் 7 தீவுகள் அமைந்துள்ளன.இந்த தீவுகள் கடல் சூழலில் முக்கியமான அங்கமாக இருப்பதோடு, தூத்துக்குடி,ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பெரும் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன. இயற்கை சீற்றங்கள் பெரிய அளவில் கடற்கரையை தாக்காத வண்ணம் தடுப்பு அரண்களாக இவைகள் செயல்படுகின்றன.


                         

மேலும் இந்த தீவுகளை சுற்றியபகுதிகளில் தான் மீன் வளம் அதிகம் இருக்கும் என்பதால் இந்த தீவுகள் தான்மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளன.கடல் சூழலிலும், கடற்கரை பாதுகாப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீவுகள்அண்மை காலமாக பெரும் ஆபத்தை சந்தித்து வருகின்றன. பருவநிலை உள்ளிட்ட காரணங்களால் தீவுகளின் நிலையும் மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் தூத்துக்குடி குழுவில் உள்ள விலங்குசல்லி தீவு, கீழக்கரை குழுவில் உள்ள பூவரசன்பட்டி ஆகிய 2 குட்டி தீவுகளும் கடலில் மூழ்கி காணாமல் போய்விட்டன.மன்னார் வளைகுடாவின் தெற்கு எல்லையில் அமைந்திருப்பது தான் வான் தீவு.கடற்கரையில் இருந்து மிக அருகாமையில் அமைந்திருப்பதால் வான் தீவு அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்து வருகிறது. கடல் அரிப்பு இந்த தீவுக்கு பேராபத்தாய் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்த தீவின் பரப்பளவு வெகுவாக குறைந்து விட்டது என சுட்டிக் காட்டுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.தூத்துக்குடி பகுதியில் உள்ள வான்தீவு கடலில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டது.


                         

இதனை பாதுகாக்க வான்தீவு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு பனைமர விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. தூத்துக்குடி பகுதி வனச்சரக அலுவலர் ரகுவரன் முயற்சியால் வனத்துறை அலுவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், கடோலர கிராம சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்கள் மூலம் இந்த தீவில் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டன. வான் தீவு பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இந்த விதைகள் முளைத்து தற்போது ஒரு அடி முதல் 2 அடி வரை வளர்ந்து உள்ளன.இதே போன்று தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவாரி தீவு, நல்லத்தண்ணி தீவுகளிலும் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ள 10 தீவுகளில் பனைமர விதைகளை நடவு செய்யும் பணி விரிவுபடுத்தப்பட்டது. சீசன் காலத்தின் பனைமர விதைகளை சேகரித்து படகுகள் மூலம் தீவு பகுதிகளுக்கு கொண்டு சென்று நடவு செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 10 தீவுகளிலும் சுமார் 25 ஆயிரம் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், தீவுகளில் பல்வேறு பாரம்பரிய மரங்களையும் நட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.


                        

இதன் மூலம் கடல் அரிப்பை தடுத்து தீவுகள் மூழ்குவதை தடுக்க முடியும்.இந்த நிலையில், தீவுகளில் பனைமரங்கள் வளர்க்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திரமோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசி பாராட்டி உள்ளார். இதனால் வனத்துறையினர் மற்றும் கடலோர மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.