ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்ட வான்கோழிகள், நாட்டுக் கோழிகள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தற்போது பருவமழை சீராக இல்லாத காரணத்தினாலும், போதிய வருமானம் இல்லாத காரணத்தினாலும் விவசாயத்தில் தற்போதைய சூழலில் வீட்டின் தேவைகளுக்காக கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியில் கடந்த ஒரு வார காலமாக மர்ம நோயினால் கோழி, வான்கோழி, காகம் போன்ற பறவைகள் இனங்கள் மர்மமான முறையில் இறந்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட வான்கோழி மற்றும் நாட்டுக்கோழிகள் இந்த மர்மநோயினால் பலியாகி வருகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை பணியாளர்கள் நோய்பட்ட கோழிகளுக்கு மருந்து கொடுத்து வருகிறார்கள். எனினும், பறவைகளின் உயிரிழப்புகள் தொடர்ந்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் ஸ்ரீவைகுண்டம் கால்நடை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இங்கு இறந்த கோழிகளை பரிசோதனை செய்வதற்கு கூட இங்கு வாய்ப்பில்லாத சூழல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.எனவே கோழிகள் எதற்காக இறந்தது என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கால்நடைத்துறை நோய் சிகிச்சை சிறப்பு புலனாய்வு குழு துணை இயக்குனர் சங்கரநாராயணன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் கால்நடை மருத்துவர் சுரேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளில் இருந்து ரத்தம் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் ஆய்வு முடிவுகள் ஒரு வாரத்தில் கிடைக்கும் அதன் பிறகே பறவைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் ,அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.