Erode East By Election: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே அமமுகவின் நிலைப்பாடு என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஈரோடு மாவட்ட அமமுக பொறுப்பாளர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது, ”ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே அமமுகவின் எண்ணம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அமமுக மேற்கொள்ளும், எதிர் வரும் ஜனவரி 27ஆம் தேதி மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்னர் அமமுக நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும். இடைத்தேர்தலில் நான் கூட போட்டியிட வாய்ப்பு உள்ளது” எனக் கூறியுள்ளார்.


இதற்கிடையில்,


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக வேண்டுகோள் விடுத்ததையடுத்து, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அதிமுக போட்டியிடும் என இன்று (20/01/2023) காலை அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதற்கு அடுத்து செய்தியாள்ர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா கூறியதாவது, கூட்டணிக்குள் முரண்டு பிடிப்பது சரியல்ல. விட்டுக்கொடுத்து போவது தான் சரி என கூறியுள்ளார். 


நேற்று நமது ஏபிபி நாடுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2021 சட்டமன்ற பொது தேர்தலில் யுவராஜா இந்த தொகுதியில் களமிறங்கி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 


இதற்கு முன்னதாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தமாகா ஏற்கிறது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 


கடந்த வாரத்தில் ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸை எதிர்த்து அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஏற்கனவே இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என நேற்று மாலை (19/01/2023) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து பேசிவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்து கூறினார். 


அதிமுகவே தற்போது இரு அணிகளாக பிளவுபட்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்த இடைத் தேர்தல் அவர்களுக்கு இந்த தேர்தலில் சின்னம் சம்பந்தமான பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே இந்த இடைத்தேர்தல் விவகாரத்தில் அதிமுக நேரடியாக களமிறங்க நினைத்தாலும் இரட்டை இலையில் நிற்க முடியுமா என்பது கேள்வியாக உள்ளது. இந்நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனவரி 27ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் இணைந்து ஓபிஎஸ் முடிவு எடுக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இன்னும் தேமுதிக தனது நிலைப்பாட்டினை அறிவிக்காத நிலையில், நாம் தமிழர் கட்சியும் தனித்து தான் களமிறங்கும் என்பதால் இடைத்தேர்தலில் போட்டி மிகவும் மும்முரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.