திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதியின் பிள்ளை; ஜெயலலிதாவின் வாரிசு என விசிக தலைவர் திருமாவளவன் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியேற்ற எடுக்கப்பட்ட முயற்சிகளை மு.க. ஸ்டாலின் முறியடித்தார் என திருமாவளவன் கூறியுள்ளார். சனாதன எதிர்ப்பில் கருணாநிதியின் பக்கம் நிற்கும் மு.க ஸ்டாலின், கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்துவதில் ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.


நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை சனாதனத்துக்கு எதிரான போர் என்று அறிவித்திருக்கிறீர்கள். சனாதனம் என்பதை இன்றைய தேதியில் எப்படி அர்த்தப்படுத்துகிறீர்கள், உங்கள் அறிவிப்பை விளக்க முடியுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "சனாதனத்தின் உள்ளடக்கம் அசமத்துவம். பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வைத் தீர்மானித்து இங்கே ஒரு கட்டுமானம் இருக்கிறது இல்லையா, அதை உருவாக்கியதும், அது அழிந்துவிடாமல் பராமரிப்பதும் சனாதனம். இந்தச் சாதியக் கட்டுமானத்தை அப்படியே பாதுகாத்திடவும், அதை உடைத்து நொறுக்கிவிட்டு சமூகநீதிக் கட்டுமானத்தை உருவாக்கிடவும் என்று இங்கே இரு தரப்பிலும் வேலைகள் நடக்கின்றன. சனாதனக் கட்டுமானத்தை அப்படியே நீட்டிக்கச்செய்ய உழைக்கும் அமைப்பாகவே நான் சங்கப் பரிவாரங்களைக் காண்கிறேன். தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் சாதி – மத வரையறைகளைக் கடந்து அமைப்புகளாக ஒருங்கிணைந்து, கீழே உள்ளவர்களையும் அதிகாரமயப்படுத்தும் சக்திகளை நாசப்படுத்த முற்படும் அரசியல் சக்தியாகவே பாஜகவைக் கருதுகிறேன். அதாவது, பாஜக என்பது சனாதனத்தின் அரசியல் வடிவம். அது தமிழ்நாட்டை இப்போது சூறையாட முற்படுகிறது. இங்குள்ள ஜனநாயக சக்திகளை அழிக்க முற்படுகிறது. ஆகையால்தான் அதற்கு எதிரான போர் என்று இந்தத் தேர்தலைக் குறிப்பிடுகிறேன்" என்று பதில் அளித்திருக்கிறார்.