கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்கள் பலர் அறிமுகமாகி உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்கிய இவர்கள் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் தங்களது முத்திரையை பதித்துள்ளனர். 


1. நடராஜன் தங்கராசு


ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்கு நெட் பவுலராக தேர்வான இவர், முன்னணி பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்ததால் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றார். ஒருநாள், T20 கிரிக்கெட் மட்டுமில்லாமல் டெஸ்ட் போட்டியிலும் தன்னுடைய முத்திரையை பதித்தார். 30 வயதை எட்டிய இவர் வரும் உலகக்கோப்பை T20 தொடரில் இந்திய அணியின் முக்கியமான துருப்பு சீட்டாக இருக்க வாய்ப்புள்ளது.




2. முகமது சிராஜ்


ஐபிஎல் தொடரில் RCB அணிக்காக விளையாடுபவர் ; நிறைய ரன்களை வாரி இரைக்கும் சிராஜ் மீது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருந்த பார்வை எப்போது வந்தது தெரியுமா? ஆஸ்திரேலிய தொடரில் முக்கிய வீரர் ஷமி காயம் காரணமாக விலகவே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்ற இவர், தன்னுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலம் அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இந்திய அணியின் எதிர்கால டெஸ்ட் நட்சத்திரமாக தற்போது பார்க்கப்படுகிறார்.




3. ஷுப்மன் கில்


பிரித்வி ஷா ஃபார்ம் இல்லாமல் தவித்ததால் அணியில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றவர் கில். அறிமுக போட்டியில் விளையாடுகிறோம் என்ற பதட்டம் இல்லாமல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற ஜாம்பவான்களை இவர் பதம்பார்த்த விதம் ரசிகர்களை கவர்ந்தது. இளம் வீரரான இவர் கோலியின் வாரிசாக பார்க்கப்படுகிறார்.




4. வாஷிங்டன் சுந்தர்


T20 ஸ்பெஷலிஸ்ட் என அறியப்பட்ட சுந்தர், முன்னணி வீரர் அஸ்வினின் காயம் காரணமாக பிரிஸ்பேன் போட்டியில் அணியில் இடம்பெற்றார். அஸ்வினின் ஆலோசனையை திறம்பட செயல்படுத்திய அவர்,  ஸ்மித் மற்றும் வார்னருக்கு தன்னுடைய சுழற்பந்து வீச்சின் மூலம் குடைச்சல் கொடுத்தார். யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். 




5. ஷர்துல் தாக்கூர்


மும்பை ரஞ்சி அணியின் முக்கிய தூண்களில் ஒருவர் தாக்கூர். நீண்ட வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் ஆடினாலும் திருப்பம் எதுவும் கிடைக்காமல் தவித்த அவரை ஆஸ்திரேலிய தொடரில் அதிர்ஷ்ட தேவதை எட்டிப் பார்த்தார். பந்து வீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் சரவெடியாக வெடித்து தன்னுடைய ஆள் ரவுண்டர் திறமையையும் தாக்கூர் வெளிப்படுத்தினார்.




6. அக்ஸர் படேல்


நீண்டகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்தவர் படேல். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டதால் அணியில் இடம்பிடித்த அவர், தன்னுடைய கூர்மையான சுழற்பந்து வீச்சின் மூலம் இங்கிலாந்தை திணறடித்தார். அஸ்வின், ஜடேஜா இணையுடன் படேலும் இணையும்பட்சத்தில் அது எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறக்கூடும்.




7. சூர்யகுமார் யாதவ்


உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் என தொடர்ந்து ரன்களைக் குவித்து வந்த சூர்யகுமாருக்கு தற்போது தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆடுகளத்தின் நாலா பக்கமும் பந்தை விரட்டும் திறன்கொண்ட இவர், இந்திய அணிக்கு சிறந்த ஃபினிஷராக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தோனி, யுவராஜ் போன்ற மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் T20 உலகக்கோப்பை தொடரில் அவர்களின் இடத்தை இட்டு நிரப்புவதற்காக சூர்ய குமாருக்கு வாய்ப்பு உருவாகி உள்ளது.




 


8. இஷான் கிஷான்


மும்பை இந்தியன்ஸ் அணியின் வார்ப்பு. ரஞ்சி போட்டிகளில் ஜார்க்கண்ட் அணிக்காக விக்கெட் கீப்பராக விளையாடுபவர் இஷான் கிஷான். மிடில் ஆர்டர் மட்டும் இல்லாமல் துவக்க வீரராக களமிறங்கியும் ரன் குவிக்கும் ஆற்றல் கொண்டவர் இவர். பந்த் அணியில் இடம்பெற்று இருப்பதால் T20 உலகக்கோப்பை தொடரில் அணியில் இடம் கிடைப்பது கடினம். எனினும் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்களில் ஒருவர்.




9. க்ருணால் பாண்டியா


ஹர்திக் பாண்டியாவின் மூத்த சகோதரர்; மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர்; இடக்கை சுழற்பந்து வீச்சு ஆள் ரவுண்டர். இதுதான் க்ருணால் பாண்டியா குறித்த அறிமுகமாக இருக்கமுடியும். ஆனால் பயம் அறியாத பேட்ஸ்மேனான இவர் கடைசி கட்டத்தில் விரைவாக ரன்களைக் குவிக்கும் திறன் கொண்டவர். தொடர்ந்து சிறப்பாக செயல்படும்பட்சத்தில் இந்திய அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.




10. பிரசீத் கிருஷ்ணா


ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்கு விளையாடும் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட வேகப்பந்து வீச்சாளர். கேப்டன் விராட் கோலியின் கவனத்தை ஈரத்த இளம் வீரர்களில் ஒருவர். 145KPH வேகத்தில் துல்லியமாக வீசுவதால் கிருஷ்ணாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான உடல்தகுதியும் கொண்டவர் என்பதால் விரைவில் வெள்ளை நிற உடையில் இவரை எதிர்பார்க்கலாம்.