குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் பயனில்லை என்றும் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் திருவாரூர் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளை செய்வதற்கான இலக்கை வேளாண் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 55 ஆயிரத்து 958 ஏக்கர் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் 33,400 ஏக்கர் நேரடி விதைப்பிலும் 22,558 ஏக்கர் நடவு பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் காவிரி மற்றும் வெண்ணாறு பாசனத்தில் ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்து விடுவதால் பல்வேறு ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் வந்து சேராத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகையால் முன்கூட்டியே தண்ணீர் திறந்தும் விவசாயிகளுக்கு பலன் இல்லாத நிலை உருவாகியுள்ளது. ஆகவே முறை வைக்காமல் ஆறுகளில் முழுமையாக தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் டிஏபி யூரியா உள்ளிட்ட உரங்களின் விலை கடந்த ஆண்டை விட தற்பொழுது அதிகளவு உயர்ந்துள்ளது. மேலும் கூட்டுறவு கடன் சங்கங்களில் சென்று விவசாயிகள் உரம் கேட்டால் தற்பொழுது குறுவை தொகுப்பு திட்டத்திற்கு மட்டுமே உரம் உள்ளதாக தெரிவித்து விவசாயிகளை திருப்பி அனுப்புவதாக தெரிவிக்கின்றனர். ஆகையால் அனைத்து விவசாயிகளுக்கும் உரம் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதேபோன்று கடந்த ஆண்டு சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது மழையின் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். ஆகையால் இந்த ஆண்டு அதனை தொடர்ந்து குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்களில் நிபந்தனை இல்லாமல் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே உள்ள கடன்களை கட்டினால் மட்டுமே புதிய கடன் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவிப்பதால் விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பு அடைகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் நிபந்தனை இல்லாமல் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை கருதி இதேபோன்று விஷயங்களை தங்கு தடை இன்றி விவசாயிகளுக்கு வழங்கினால் மட்டுமே இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்