டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் பழமை வாய்ந்த தொடர்களில் ஒன்று விம்பிள்டன். இந்தாண்டு 135வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முன்னணி வீரரான ரோஜர் ஃபெடரர் பங்கேற்காத நிலையில்,  பிரஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால் மற்றும் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிக் இருவரில் யார் இந்தாண்டு விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பை வெல்வார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் சில நாட்களில் விம்பிள்டன் சாம்பியன் என்று தெரிந்துவிடும். 


நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் விம்பிள்டன் வராலாற்றில் மறக்க முடியாததாய் அமைந்துவிட்டது. ஆம், காலிறுதிப் போட்டியில் ரபேல் நடால் போராடி வெற்றி பெற்றார். அதாவது, விறுவிறுப்பான ஆட்டத்தின் நடுவே, காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறிவிடுவார் என்ற நிலையில், காயத்துடன் போராடி வெற்றி பெற்றார். 






விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று பிரபல வீரர் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிச் சுற்றில் நடாலும் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸும் இடையிலான போட்டியில், நடால் காயம் காரணமாக சற்று தடுமாறினார்.






22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், வயிற்றுத் தசைப்பிடிப்பு, கால் வலி போன்ற பிரச்சிகளை காரணமாக அவரால் வழக்கம்போல விளையாட முடியாமல் போனது. ஒரு பக்கம் பார்வையாளர்களும், நடால் தந்தையும் அவரை விளையாட வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், நடால் வலியுடன் விளையாடி போட்டியை வென்றார். 


இந்தப் போட்டியின் போது, 2-வது செட்டில் சிறிது நேரம் பிரேக் எடுத்துக்கொண்டு  காயங்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின்னர், களம் இறங்கினார்.


2008 மற்றும் 2010-ல் விம்பிள்டனை வென்ற நடால், 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போட்டியில்,  3-6, 7-5, 3-6, 7-5, 7-6 (10/4) என்ற செட் கணக்கில் ஃபிரிட்ஸை வீழ்த்தி வெற்றியை தன்வசமாக்கினார்.


நடால் காயங்களுடன் விளையாடுவது புதிதல்ல. வலி நிவாரணி ஊசி போட்டுக்கொள்வார். அப்படி பயிற்சி எடுத்துதான் விம்பிள்டன் டென்னிஸில் விளையாடுவதாக அறிவித்தார். கடந்த ஒருவாரமாக காயம் காரணமாக தவித்து வந்தவருக்கு, நேற்றைய போட்டியில் அவருக்கு உடல் ஒத்துலைக்காமல் போனது. 


இவரது வெற்றியை விம்பிள்டன் டென்னிஸின் டிவிட்டர் பக்கத்தில் ‘பாகுபலி’ என்று குறிப்பிட்டுள்ளது. 


வெற்றிக்கு பிறகு பேசிய நடால்:


”காயத்தினால் நான் துடித்தபோது, போட்டியில் இருந்து வெளியேறுமாறு எனக்கு அறிவுரைகள் கிடைத்தன. ஆனால், போட்டியில் இருந்து பாதியில் வெளியேறுவது என்பது எனக்கு கடினமான ஒன்று. நான் ஒருபோதும் அப்படி செய்ய மாட்டேன். வலியோடு விளையாடி பழகிட்டேன். களத்தில் இருந்தபோது, எப்படியாது இந்தப் போட்டியை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கிருந்தது. ஆனால், வாழ்விலே இது எனக்கு மோசமான நாள். அதீத வலியோடு விளையாடி இருக்கிறேன்,” என்றார். 






அரையிறுதியில் விளையாடுவரா நடால்? 






நடால் ஆஸ்திரேலிய வீரரான Nick Kyrgios உடன் அரையிறுதியில் மோதுகிறார். நாளை நடைபெற இருக்கும் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு, “ என்னால் எதையும் உறுதியாக கூற முடியாது; நாளை என்ன நடக்கும் என்று தெரியாது; அதனால் இந்த கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. நான் இப்போது ஏதாவது கூறினால், நாளை அது பொய்யாகிவிடும்.” என்று கூறியுள்ளார்.