தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரண்டு மாத காலமாக கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காவடி எடுத்தல், தேர்த் திருவிழா, அம்மனுக்கு பூச்செரிதல், தீ மிதித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தேர் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் தப்பலாம்புலியூர் கிராமத்தில் உள்ள குழுந்தாளம்மன் கோவிலில் பக்தர்கள் சுமந்து செல்லும் தேர் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. திருவாரூர் அருகே தப்பலாம்புலியூர் கிராமத்தில் அருள்மிகு பிடாரி குளுந்தாளம்மன் கோயில் இருந்து வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் ஆனது அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் கோவிலில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனை ஒட்டி நடப்பாண்டில் இந்த தேர்த்திருவிழா நேற்று இரவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் இந்த தேரோட்டம் நிறைவு பெறுகிறது.




இரவு கோவிலில் இருந்து புறப்பட்ட தேரானது அங்குள்ள அக்ரஹாரத்தின் நான்கு வீதிகளிலும் சுற்றி வந்து நிறுத்தப்பட்டது. மேலும் இந்த தேரானது கோயிலின் அருகே இருந்து வரும் வயல் பகுதியில் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று காலை தேரோட்டம் தொடங்கி வீதிகளை சுற்றி வந்து மீண்டும் கோவிலுக்குள் கொண்டு சென்று தேர் நிறுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனர். குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர் திருவிழாவானது வடம் பிடித்து இழுக்கப்பட்டு வருவது வழக்கம். ஆனால், தப்பலாம்புலியூர் கிராமத்தில் உள்ள பிடாரி குளுந்தாளம்மன் கோயில் தேரோட்டம் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் தோளில் சுமந்து சென்று தேரை தூக்கி வருவது வழக்கம்.




வழக்கமாக கோயில் தேர்த்திருவிழா என்றால் சக்கரம் பொருத்தப்பட்ட தேரில் சம்பந்தப்பட்ட கோவில்களின் உற்சவர் சுவாமி வைக்கப்பட்டு விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் தப்பலாம்புலியூர் பிடாரி குளுந்தாலம்மன் கோயில் தேரானது மற்ற ஊர்களின் தேர் திருவிழா போன்று இல்லாமல் தேர் போன்று அலங்கரிக்கப்பட்டு அதில் பிடாரியம்மன் சாமி வைக்கப்பட்டு பக்தர்கள் மூலம் தோளில் சுமந்து செல்லும் வகையில் இந்த தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த தேரை முன்னும் பின்னும் என 80  பக்தர்கள் மாறி மாறி தூக்கி செல்வது வழக்கம். தேருக்குள் சிவாச்சாரியார் ஒருவர் அமர்ந்து செல்லும் நிலையில் பக்தர்கள் அசைந்து தேரை கீழே சாய்க்கும் வழக்கத்துடன் தேரோட்டம் நடைபெறுவதால் இந்த தேர் திருவிழாவிற்கு விழுந்து எழுந்தால் அம்மன் தேர் திருவிழா என்ற பெயரும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வரக்கூடிய பக்தர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் குடிநீர் தற்காலிக கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பட்டிருந்தது.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண