ஆன்லைன் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கான லிங்கை துண்டித்த ஆகாஷ் ஃபவுண்டேஷன் நீட் கோச்சிங் சென்டர் ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த செல்வதுரை என்பவரின் மகன் முகேஷ் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அண்ணா நகரில் உள்ள ஆகாஷ் பவுண்டேஷன் என்கிற நீட் கோச்சிங் மையத்தின் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்திருக்கிறார். மேலும் ஆன்லைன் பேமண்ட் மூலம் 28.08.2020ல் 29,500 ரூபாயும், 01.09.2020ல் 11,275 ரூபாயும், 8.10.2020ல் 32,572 ரூபாயும் செலுத்தியிருக்கிறார். இந்தநிலையில் ஆன்லைன் வகுப்பு தொடங்கி 15 நாட்களில் முகேஷ் தனக்கு அந்த வகுப்பு திருப்திகரமாக இல்லை, புரியவில்லை என்று ஆகாஷ் கோச்சிங் சென்டருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு உரிய விளக்கம் அளிக்காத ஆகாஷ் பவுண்டேஷன் ஆன்லைன் வகுப்பிற்குறிய மெட்டீரியலை அனுப்பாமல் இருந்ததுடன் ஆன்லைன் வகுப்பிற்கான இணைப்பையும் துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர் வழக்கறிஞர் மூலம் ஆகாஷ் பவுண்டேஷன் நிறுவனத்திற்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய போது கதவு பூட்டப்பட்டிருப்பதாக கூறி நோட்டீஸ் திரும்பி வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 7.10.2021 ல் இது குறித்து மாணவர் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு, சென்னையை சேர்ந்த ஆகாஷ் பவுண்டேஷன் ஆன்லைன் கோச்சிங் மூலம் வழங்கப்படும் நீட் பயிற்சி திருப்தி அளிக்கவில்லை என்றால் பணம் திரும்பத் தரப்படும் என விளம்பரம் செய்துள்ளது. அதனடிப்படையில் மாணவர் கட்டிய பணத்தை கணக்கிட்டு திரும்ப வழங்க வேண்டும். மேலும் மாணவருக்கு உரிய மெட்டீரியல் வழங்காதது மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கான இணைப்பை துண்டித்தது போன்றவை சேவை குறைபாடாக இந்த ஆணையம் கருதுகிறது. அதற்கு இழப்பீடாக ஆகாஷ் பவுண்டேஷன் 25 ஆயிரம் ரூபாய் மாணவருக்கு வழங்க வேண்டும். வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தத் தொகையினை தீர்ப்பளித்த நாளிலிருந்து 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஒன்பது சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பல்வேறு அதிரடி தீர்ப்புகள் தொடர்ந்து குறைதீர் ஆணையத்தின் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு புதிதாக வாங்கிய தொலைக்காட்சி இரண்டு நாட்களில் பழுது அடைந்த நிலையில் அதற்கு மாற்றாக புதிய தொலைக்காட்சி வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதேபோன்று விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு முறையாக வழங்காத பயிர் காப்பீட்டு நிறுவனம் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் தொடர்பாகவும் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால் தொடர்ந்து நீதிமன்றத்தில் அதிக அளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.