சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் சென்னை பகுதியில் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.


அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், ”நாமக்கலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி சொல்லி இருந்தார். யார் கூட்டணியில் இருப்பார்கள் என்று அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். உச்சநீதிமன்ற இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். அதிமுகவில் இருக்கும் அனைத்து தொண்டர்களும் இணைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முறையான செய்திகள் உங்களை அழைத்துச் சொல்லப்படும் . 


துணை முதல்வர் என்ற பொறுப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் படி கிடையாது. நாம் தான் வைத்து கொண்டோம். முதலமைச்சருக்கு இருக்கின்ற பிரத்தியேக அதிகாரம் துணை முதலமைச்சருக்கு இல்லை. ஜெயக்குமார் வாயில் நல்ல விஷயங்கள் எதுவும் வராது. அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் மாவட்டச் கழக செயலாளர்கள் பணிகள் நிறைவடைந்த பிறகு மாவட்டம் தோறும் தொண்டர்களை சந்திக்கும் பயணம் உறுதியாக நடக்கும்” என்றார்.



தொடர்ந்து பேசிய அவர், ”திமுக செய்யத் தவறியதைப் பற்றி தினம்தோறும் அறிக்கை வாயிலாக நான் வெளியிட்டு வருகிறேன். இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் திமுக ஆளும் கட்சி அவர்களுடைய தவறுகளை நேரடியாக எதிர்க்கின்ற எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதில், உள்குத்து எதுவும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநரை பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகளை வெளிக்கொண்டு வருவது தவறான முன்னுதாரணமாக அமையும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவருக்குரிய கடமைகளை ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகவில்லை. ஆளுநர் பதவி தேவையில்லை என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றும் கூறினார்.


முன்னாள் ஆளுநர் உயர்கல்வித்துறையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பதவியை கொடுத்ததாக கூறியிருந்தார் என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், 


”அது உரிய விசாரணை செய்யப்பட்டால் தவறு நடந்து இருந்தால் ஓபிஎஸ் கூட தவற செய்திருந்தால் சட்டப்படி விசாரணைக்கு உட்பட்டு தண்டனை வழங்க வேண்டும். அதிமுகவில் சட்டபூர்வமான ஒருங்கிணைப்பாளர் நான் தான். அதிமுகவில் பொறுப்பாளர்களை நியமிக்க அதிகாரம் எனக்கு தான் உள்ளது. தேர்தல் ஆணைய பட்டியலில் என் பெயர் தான் ஒருங்கிணைப்பாளராக உள்ளது. இந்த சூழ்நிலையில் பல்வேறு கருத்துக்களை சொல்வது ஏற்புடையது அல்ல.


அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் தர்மயுத்தம் தொடங்கினேன். யாருக்கு எதிராக தொடங்கினேன் என்பது தெரியும். அந்த சூழ்நிலையில் பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததை எதிர்த்து நான் வாக்களித்தேன். அதற்கு பின்னால்  வேலுமணி, தங்கமணி  என்னிடம் வந்து டிடிவி தினகரன் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார். அவர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால்  ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பதட்டத்தோடு என்னை வந்து சந்தித்தார்கள். அரசுக்கு நான் தந்த ஆதரவினால் தான் எடப்பாடி பழனிச்சாமி அரசு 5 வாக்குகளில் காப்பாற்றப்பட்டார். அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் நான்கரை வருடம் அவர் செய்த பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை செய்தார். என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் ஒரே நோக்கத்தோடு தான் அவர் செயல்பட்டார். அதை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதை பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் அது வெளியிடப்படும். 


 முதலமைச்சர் பதவியை கூவத்தூரில் உட்கார்ந்து கொண்டு சசிகலா தட்டிக் கொடுத்து தட்டிக் கொடுத்து இவர் தவழ்ந்து வந்து முதல்வர் என்ற பதவியை அவருக்கு தந்தது யார்? சசிகலா. அந்த சசிகலாவை எந்த அளவிற்கு விமர்சனம் செய்த நம்பிக்கை துரோகி யார் என்பது தமிழக மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக நிரூபணம் ஆகிவிட்டது” என்றார். 


 “எடப்பாடி முன்பு ஒரு சவாலை வைத்தோம். சட்ட சபையில் ஸ்டாலினோடு ஓ.பி.எஸ்,  அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தோம். நிரூபித்தால் நாங்கள் அனைவரும் அரசியலை விட்டு விலகத் தயார்,  நிரூபிக்கவில்லை என்றால்  அதிமுகவிலிருந்து யாரும் விலக வேண்டாம். பொய்யே சொல்லி பழக்கப்பட்டு இருக்கிற எடப்பாடி பழனிச்சாமி மட்டும் விலக வேண்டும். நாங்கள் விட்ட சவாலுக்கு என்ன பதில் என்று இடையில் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.


தமிழகத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளில் இன்றைக்கு சந்தர்ப்பத்திற்கு தகுந்த மாதிரி நேரத்திற்கு தகுந்த மாதிரி பொய்யே சொல்வதில் முதன்மையானவர் எடப்பாடி பழனிச்சாமி” என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.