ஒருங்கிணைந்த நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து 1997 ஆம் ஆண்டு, திருவாரூர் மாவட்டம் பிரித்தெடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் உருவானதிலிருந்து தற்பொழுது வரை 33 ஆட்சியர்கள் பணியாற்றி பணி மாறுதல் பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் 34வது ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய முதல்வராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பல இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆட்சியர் பணி வழங்கப்பட்டு வருகிறது. மூத்த அதிகாரிகள் பல்வேறு துறையில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வரும் நிலையில் இளம் அதிகாரிகள் ஆட்சியராக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்,அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சாந்தா பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவையில் வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த காயத்ரி கிருஷ்ணன் தற்பொழுது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து குறிப்பேடுகளில் கையெழுத்திட்டார். அதனை அடுத்து அனைத்து துறை அதிகாரிகளையும் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் ”எனது பெயர் காயத்ரி கிருஷ்ணன், நான் பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் ஆக பணிபுரிந்து வந்தேன், அதனைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் வணிகவரித்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்தேன்,தற்பொழுது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். திருவாரூர் மாவட்டத்தில் சாதாரண மக்கள் அதிகமாக வாழக்கூடிய இடம், குறிப்பாக விவசாயிகள் நிறைந்த மாவட்டம். திருவாரூர் மாவட்டத்தில் பிறக்க முக்தி பெற்ற தலம்,திருவாரூர் மாவட்டத்தில் நான் பணியாற்றுவதை மிகவும் புண்ணியமாக நினைக்கிறேன்,நாடு முழுவதும் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது கொரோனா தொற்று. இதனை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்
மேலும் “ திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அரசு வழங்கும் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு சிறப்பான முறையில் கொண்டு செல்ல நான் பணியாற்றுவேன்” எனக் கூறினார். புதிய ஆட்சியர் பதவியேற்கும் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் காவல் துறையினர் என பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.