ஆம்பூர் அருகே தனியார் தோல் தொழிற்சாலையில் பணியின்போது விஷவாயு தாக்கி தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு , மேலும் 2 பேர் கவலைக்கிடம் தொழிற்சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல தனியார் தோல் தொழிற்சாலைகளும் , தோல்பதனிடும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றது .
இதேபோல் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் NMH என்ற பெயரில் ஒரு தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .
இந்நிலையில் இன்று தொழிற்சாலையில் பணியின்போது கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது . இதனை சுத்தம் செய்யும் பணியை புத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (55 ) என்பவருக்கு அளிக்கப்பட்டு அவர் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்டுள்ள அடைப்பை எடுப்பதற்காக தொட்டிக்குள் இறக்கி விடப்பட்டுள்ளார்.
அப்பொழுது துரதிஷ்டவசமாக தொட்டியில் இருந்த விஷவாயு கசிந்து ரமேஷ் மூச்சு திணறி உதவிக்காக அலறியுள்ளார் . அவரது அலறல் சத்தத்தை கேட்டு அவருக்கு உதவிசெய்வதற்காக கழிவு நீர் தொட்டியில் இறங்க அவருடைய சக தொழிலாளர்கள் , புத்தூர் கிராமத்தை சேர்ந்த ரத்தினம் (60 ) மற்றும் மோதகபள்ளி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (27 ) ஆகிய இருவரையும் விஷவாயு தாக்கியது . கவலைக்கிடமான நிலையில் மூவரையும் ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .
இதில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார் , மேலும் பிரஷாந்த் மற்றும் ரத்தினத்துக்கு , வேலூர் மற்றும் ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .
தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் , உமராபாத் காவல் நிலைய போலீசார் அந்த தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இது தொடர்பாக , தமிழ் நாடு தொழிற்சங்க நடுவனத்தின் மாநில பொதுச்செயலாளர் செ ரூபனை தொடர்பு கொண்ட பொழுது , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1500 கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது , இதில் பெரும்பாலான தொழிற்சாலைகளில் , தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் கருவிகளை வழங்குவதில்லை .
தொழிற்சாலை முதலாளிகளின் இந்த அலட்சியப்போக்கினால் , வருடாவருடம் பல தொழிலாளர்கள் உயிர் பறிபோககின்றது . இதுபோன்ற உயிர் இழப்புகள் ஏற்படாத வண்ணம், தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்புகளை உறுதி செய்யவேண்டும் என்றும் , இறந்துபோன தொழிலார் ரமேஷுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் , உடனடியாக சம்பவம் நடந்த தொழிற்சாலையில் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மைய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் எங்கள் தமிழ் நாடு தொழிற்சங்க நடுவனத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார் .