தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அவரின் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுதான். கொரோனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான நிதி உதவிகளை முதலமைச்சர் பிரதமரிடம் கேட்டுப் பெறுவார் என தெரிகிறது. சந்திப்பு முடிந்து இன்று இரவு டெல்லியில் தங்கும் முதலமைச்சர் நாளை காலை தமிழ்நாடு திரும்புகிறார்.
இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்திப்பு நிகழ உள்ளது. இந்நிலையில் திமுக இணையதள அணி சார்பில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டெல்லி ஸ்டாலினை வரவேற்கிறது என்ற வாசகங்கள் ட்ரெண்டாகின்றன.
இதனிடையே முதலமைச்சர் முக ஸ்டாலினை வரவேற்க டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ புல்லட் ப்ரூப் வாகனத்தை அதாவது துப்பாக்கி குண்டு துளைக்காத வாகனத்தை அனுப்புவதாகவும் மாநில முதலமைச்சர் ஒருவருக்கு கிடைக்கும் முதல் கவுரவம் இது என்று சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவு செய்து வருகின்றனர். அதோடு இத்தனை செய்யும் பிரதமரை கோ பேக் மோடி என திமுகவினர் ட்ரெண்ட் செய்கின்றனர் எனவும் பதிவுகள் வர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் உண்மையிலேயே பிரதமர் மோடி தனது வாகனத்தை டெல்லி விமான நிலையத்துக்கு அனுப்பி முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்றாரா அல்லது தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் இல்லம் செல்ல கார் ஏதும் அனுப்பப்பட்டுள்ளதா என தமிழ்நாடு இல்ல அதிகாரிகளை கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர்கள் “தமிழ்நாடு முதல்வர்கள் பயன்படுத்துவதெற்கென அதிகாரப்பூர்வ வாகனங்கள் இல்லத்தில் உள்ளன, அதையே அனைத்து முதலமைச்சர்களும் பயன்படுத்துகின்றனர். இன்று காலையில் இல்லத்தில் இருந்து முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ வாகனமே சென்றது, பிரதமரை சந்திக்கவும் அதில்தான் முதலமைச்சர் செல்கிறார்” என கூறினார்கள்.
பிரதமரும் தனது காரை யாருக்கும் அனுப்பவில்லை என்றும் முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ வாகனத்தையே பயன்படுத்தினார் என்றும் முதலமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளும் கூறினார்கள். மேலும் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் இல்லம் செல்ல அதிகாரப்பூர்வ வாகனமே பயன்படுத்தப்பட உள்ளதாகவும் ஏற்கெனவே பாதுகாப்பு காரணங்களுக்காக அதனை பிரதமர் இல்ல நுழைவுக் குறிப்புக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தனர். பத்திரிகையாளார் சிலரிடம் கேட்ட போது அவர்களும் அதையே கூறினர். டெல்லி செய்தியாளர் அரவிந்த் தனது ட்விட்டர் பதிவில் வாட்ஸப் பல்கலைகழக தகவலுக்கு பலியாக வேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளார்.