விழுப்புரம் : மத்திய அரசாங்கம் கரும்பு டன் ஒன்றுக்கு 5 ஆயிரமும் மாநில அரசின் ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டுமென முண்டியம் பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊக்கத்தொகை:
விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம். இம்மாவட்டத்தில் தொழிற்சாலையே கிடையாது. நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர் வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. 2023 மார்ச் மாத கணக்கெடுப்பின் படி விழுப்புரம் மாவட்டத்தில் 15,383 ஹெக்டேரில் கரும்பு சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ 2,919 வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2016-2017-ம் ஆண்டு வரை மாநில அரசு சார்பில், கரும்புக்கு கூடுதல் பரிந்துரை விலை அறிவிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் இது ரத்து செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மீண்டும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இதை செயல்படுத்தவில்லை. வழக்கமாக ஒரு டன் கரும்பு ரூ.195 ஊக்கத் தொகை வழங்கப்படும். நடப்பாண்டுக்கு இந்த ஊக்கத்தொகையை இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் மத்திய அரசு அறிவித்த, ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்ச விலையான ரூ 2,919 தான் தமிழ்நாட்டில் கரும்பு கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது.
கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதவது:-
கரும்பு அறுவடை துவங்கிய நிலையில் விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் பேரவை கூட்டம் நடைபெற்றது இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் மத்திய அரசாங்கம் கரும்பின் விலையானது டன் ஒன்றுக்கு 5 ஆயிரமும், மாநில அரசு டன் ஒன்றுக்கு ஊக்க தொகையாக 500 ரூபாய் வழங்க வேண்டுமெனவும் மத்திய அரசு 2023- 24 ஆம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கு டன் ஒன்றுக்கு 3150 அறிவிக்கிறார்கள் ஆனால் கிடைப்பதே 2828 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும்,
மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு தொகை பிழித்திறன் அடிப்படையில் கிடைப்பதால், ஒரே மாதிரியான பிழித்திறன் அடிப்படையில் கரும்பு தொகையை வழங்க வேண்டும் என கூறினார். மேலும் கரும்பினால் கிடைக்கும் எத்தனால் (Ethanol) கொண்டு சாராயம் கிடைக்கின்ற நிலையில், சரியான விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கரும்பு விலையும் ஊக்கத்தொகையும் உயர்த்த வேண்டுமெனவும் கரும்பிற்கான உரத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் கரும்பின் டன் ஒன்றிற்கான விலையை அதிகாரிக்காமல் மத்திய அரசு உள்ளதாக தெரிவித்தார்.