திருவாரூரில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.


திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திருவாரூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் திருவாரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் மது போதையில் பல்வேறு நபர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆகையால் அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் பேருந்து பெருங்கடம்பனூர் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று பேருந்தை மறைத்து அதில் ஒருவர் மட்டும் ஏறுவதும் இறங்குவதும் என மீண்டும் மீண்டும் அதே போன்று செய்துள்ளனர். இதுகுறித்து பேருந்து நடத்துனர் ராஜாராமனிடம் கேட்டதற்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கடுமையாக தாக்கியுள்ளனர். 




மேலும், அருகில் கிடந்த கண்ணாடி துண்டால் நடத்துனர் ராஜாராமனின் தொடையில் குத்தியுள்ளனர். இதுகுறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் நடத்துனர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலாஜி விவின் முருகநாதன் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய நான்கு பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நடத்துனர் மற்றும் ஓட்டுநரை தாக்கியவர்களில் விவின் மட்டும் கைது செய்துள்ள நிலையில் மீதமுள்ள நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 150 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 




இதன் காரணமாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயங்கக்கூடிய 70 பேருந்துகள் இயக்கப்படவில்லை. காலை 7 மணிக்குள் செல்ல வேண்டிய 15 பேருந்துகளும் வெளியேறவில்லை. இதன் காரணமாக பயணிகள் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தத்தின் காரணமாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனையடுத்து நாகை மண்டல துணை மேலாளர் வணிகம் சிதம்பரச்குமார் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவ அறிக்கை வந்தவுடன் இன்று மாலைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன.