மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள  உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் பாமக நிர்வாகி குத்தாலம் கணேசன் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். மணமக்கள் அருண் பிரசாத் மற்றும் திவ்யா ஆகியோருக்கு பெண்களை முன்னிலை படுத்தி பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடைபெறும் திருமண என மணமக்களின் தாய்மார்கள்  மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்தார்.




அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எழுதப்படாத மோசடி நடைபெறுகிறது. ஒரு மூட்டைக்கு ஐம்பது ரூபாய் வரை விவசாயிகளிடம் வசூல் செய்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் கோடி வரை கரும்பு நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு உள்ளது. அதனை அரசு பெற்று தர வேண்டும். சென்னை மதுரவாயில் பகுதியில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு பெற்றோரும் ஒரு காரணம். பெற்றோர்களுடைய அழுத்தம் தாளாமல் மாணவர்கள் இது போன்ற முடிவுகள் எடுக்கின்றனர். மாணவர்கள் தற்கொலை முடிவுகளை தயவு செய்து எடுக்க வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார். 




நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு  தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக செய்தியாளரின் கேள்விக்கு, இதே தமிழ்நாட்டில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நீட் தேர்வு தற்கொலை நடப்பதில்லை என்றும், மற்ற மாநிலங்களை விட இங்கு தற்கொலைகளும் அதிகரித்துள்ளது இதற்கு  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன பதில் சொல்லப் போகிறார்? எனவும் கேள்வி எழுப்பினார். தற்கொலைகளுக்கு காரணம் நீட் தேர்வு தான் என்றும் அதை ரத்து செய்யாத மத்திய அரசுதான் என்றும், தமிழக மாணவர்களின் நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசும்  ஆளுநருதான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.  




மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய நீட் மசோதாவை மத்திய அரசு உடனடியாக சட்டமாக கொண்டுவர வேண்டும், இதுநாள்வரை தமிழ்நாட்டின் மனநிலையை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை, ஒரு மாநிலத்தின் ஐந்து ஆண்டுகளில் நீட் தேர்வால் 60 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு அசாதாரணமான சூழல் இது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நீட் விதிவிலக்கு மசோதாவில் ஜனாதிபதி உடனடியாக கையெழுத்திட வேண்டும். ஏன் என்றால் இது உயிர் போகும் பிரச்சினை. இதனை மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார். டெல்டா பகுதிகளில் அதிகமான கொலை குற்றங்கள் நடைபெறுவதாகவும் முதலமைச்சரின்கீழ் காவல்துறை இயங்குவதால் இதற்கு சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். டெல்டா பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளை அழைத்து கலந்து ஆலோசித்து உரிய தீர்வு காண வேண்டும் எனவும் கூறினார்.