தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களம், மேல்மங்கலம், வடுகபட்டி, சில்வார்பட்டி, கீழவடகரை, மஞ்சளார் ,சிந்துவம்பட்டி, நடுப்பட்டி, உள்ளிட்ட பகுதியில் 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் நெல் கதிர்கள் நல்ல விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.
கடந்த 20 நாட்களுக்கு முன்பாகவே இந்த பகுதியில் நெல் அறுவடை பணிகளை தொடங்கிய நிலையில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அறுவடை பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து நிலங்களில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், கடந்த 12 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்து நீரில் மூழ்கி நிலத்திலேயே முளைத்து வரும் நிலையில் தொடர்ந்து அறுவடை பணிகள் செய்ய முடியாத நிலையால் முற்றிலும் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், சேதமடைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், அப்படி அறுவடை செய்தால் முளைத்து சேதமடைந்த நெல்களை தனியார் வியாபாரிகளும், அரசு கொள்முதல் நிலையம் கொள்முதல் செய்ய முடியாத நிலையே ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மழையால் சேதமடைந்துள்ள நெல் பயிர்களை ஆய்வு செய்து தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்