விக்டிம் அந்தாலஜி மூவியின் கடைசி பாகம், ‛கன்ஃபெஷன்’. அதாவது வாக்குமூலம். வழக்கம் போல வெங்கட் பிரபு காலிங் என அவரது அடையாளத்தோடு சென்னையில் ஆரம்பிக்கிறது கதை. வேலை முடித்து வீட்டுக்கு வரும் அமலா பாலுக்கு, பயிற்சி பணியாளர் ஒருவர் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்கிறார். அதை தவிர்த்து விட்டு லண்டனில் உள்ள தனது கணவருக்கு போன் செய்கிறார் அமலா பால். 


கணவன்-மனைவிக்கான அதே கிளுகிளு உரையாடலில் அமலா-கிரிஷ் தம்பதி கொஞ்சி குலாவுகிறது. மற்றொரு முனையில், ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து இரவுப்பணிக்கு புறப்படும் பிரசன்னா. அவரை வழியணுப்பி வைக்கும் மனைவி. மது, கஞ்சா என தன் சோர்வை போக்க அமலா பால் அடுத்தடுத்து போதையில் இருங்குவதும், ப்ரீயாக இருக்க ஆடைகளை களைவதுமாய், அவரும் கிக் ஏற்றி, காண்போரையும் கிக் ஏற்றிக் கொண்டிருக்கும் போது, அந்த மாணவர் வீட்டிற்கு வருகிறார். அவரை உள்ளே விடாமல், துரத்துகிறார் அமலா.






இதற்கிடையில் வேலைக்கு புறப்படும் பிரசன்னா ஒரு பகுதியில் காரை நிறுத்திவிட்டு, ஒரு கட்டடத்தின் மீது ஏறுகிறார். அங்கிருந்த படி ஒரு துப்பாக்கியில் அமலாவை குறி வைத்து, ‛10 எண்ணுவதற்குள் நீ செய்த தவறுகளை கூறு’,  அப்போது அமலா பால் சொல்லும் தவறுகள், அவரது வாக்குமூலத்திற்குப் பின் என்ன நடந்தது? யார் அதை செய்யச் சொன்னது? என்கிற சஸ்பென்ஸோடு முடிகிறது வாக்குமூலம். 


வீட்டுக்குத் தெரியாமல், பணத்திற்காக ஒருவரை திருமணம் செய்து வாழும் அமலாபால், துப்பாக்கி முனையில் தன் தவறுகளை ஒவ்வொன்றாக ஒப்பிக்கும் போதும், அவற்றை கறக்க பிரசன்னா மிரட்டும் போதும், இருவரும் கச்சிதமாக நடித்துள்ளனர். இறுதியில் அது ஒரு ராங்க் கால் எனும் போது, அமலா பெருமூச்சு விடுவதும், பக்கத்து வீட்டு பெண்ணை சுட்டுவிட்டு, அமலாவிடம் வாங்கி தகவலை வைத்து, புதிய பிஸினஸ் பேசுவதும் என , வேறு ஒரு ஜானரில் கதை பயணிக்கிறது. 






இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ... என்கிற பல்வேறு திருப்பங்களுடன் போகும் கதையை அழகாக கையாண்டிருக்கிறார் வெங்கட் பிரபு. ப்ரேம்ஜியின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. எல்லா சஸ்பென்ஸையும் அவர்களை வைத்து, அவர்களே பொறுமையாக அவிழ்கிறார்கள். அமர்ந்து அழகாக நாம் ரசிக்கலாம். கவர்ச்சி இல்லை என்றாலும், எதார்த்தம் என்கிற பெயரில், ஒருவிதமான தூக்கல் இருப்பதை உணர முடிகிறது. ஆனால், அது எதார்த்ததை மிஞ்சவில்லை. 


ஒரு பெண்ணின் தவறை இப்படியும் கண்டுபிடிக்கலாம் என கூறி, அதற்கான தண்டனையையும் அவர்களே வழங்கிவிடுகிறார்கள். விக்டிம் படத்தின் நான்காவது பாகமாக வரும் இந்த கதை, கண்டிப்பாக சுவாரஸ்யம் கொஞ்சமும் குறையாக கதை.