தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவுபடி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைப்பட்டுள்ளது. மேலும், ஆலை முழுமையாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆலை சுமார் 4 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடப்பதால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஆலையில் உள்ள இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. எனவே, ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என வேதாந்தா குழுமம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள இயந்திரங்கள் மற்றும் ஆலை வளாகத்தில் உள்ளிட்ட கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. சென்னை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் கண்ணன் தலைமையில், மதுரை தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் (பதிவு) ரவிச்சந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மதுரை தென்மண்டல துணை இயக்குநர் விஜயகுமார், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் (சிவில்) செந்தில், சென்னை ஐஐடி பேராசிரியர் சம்பத், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருநெல்வேலி இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயலெட்சுமி ஆகிய 6 பேர் இந்த உயர்மட்டக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி வந்தனர். ஆனால், அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அப்போது ஆலையில் ஆய்வு செய்ய முடியவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மட்டும் நடத்திவிட்டு குழுவினர் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் உயர்மட்டக் குழுவினர் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்தனர். இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று தங்கள் ஆய்வு பணியை தொடங்கினர். ஆலையில் உள்ள அனைத்து இயந்திரங்கள், கட்டிடங்களை முழுமையாக ஆய்வு செய்து, அவைகளின் தற்போதைய நிலை, பாதுகாப்பு குறித்து உரிய பரிசோதனைகளை செய்தனர். மேலும், ஆலை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் இந்த ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து உயர்மட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சத்தியராஜ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலையின் தற்போதைய நிலவரம், அங்குள்ள இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்களின் நிலை மற்றும் ஆலை வளாகத்தில் உள்ள பொருட்கள், ரசாயனம் குறித்து உயர்மட்ட குழுவினர், ஆட்சியர் தலைமையிலான உள்ளூர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு உயர்மட்டக் குழுவினர் தலைவரான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பாக அந்த நிறுவனத்தினர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் உள்ள சாராம்சங்களை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. குழுவினர் ஏற்கனவே ஒரு முறை ஆய்வு செய்ய வந்த போது உள்ளாட்சித் தேர்தல் காரணமாக ஆய்வு செய்ய முடியவில்லை. எனவே, தற்போது மீண்டும் வந்து ஆய்வை முடித்துள்ளோம். ஆலையில் உள்ள கட்டிடங்கள், இயந்திரங்கள் எந்த நிலையில் உள்ளன, ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா, ஆலை வளாகத்தில் உள்ள பசுமை பரப்பு போன்றவற்றை ஆய்வு செய்துள்ளோம். 4 ஆண்டுகளாக செயல்படாத ஆலை என்பதால் அதன் செயல்பாட்டை இப்போது கணிக்க முடியாது. இயந்திரங்கள் பல இடங்களில் துருபிடித்த நிலையில் காணப்படுகின்றன. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்படும். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் போது அந்த அறிக்கையும் இணைத்து தாக்கல் செய்யப்படும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்