மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் 36 வயதான கதிரவன். சமூக ஆர்வலரான இவர், தனது கிராமத்தின் வழியே செல்லும் வீரசோழன் ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து குடியிருப்புகளில் சாக்கடை கழிவுநீர் ஒட்டு மொத்தமாக வீரசோழன் ஆற்றில் விடப்படுவதாகும், இதனால் ஆறு மாசடைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் , குளம், குட்டை, வாய்க்கால்கள் ஆக்கிரம்புகளை அகற்ற வேண்டும் என பலமுறை அரசுக்கு மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் அவர் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி ஆற்றின் நடுவே தலைகீழாக சிரசாசனத்தில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா சம்பவத்தை பார்த்து இளைஞரிடம் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார். மேலும் உடனடியாக அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால், இதுவரை எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழக முதல்வர் தனி பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் என பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர் கதிரவன் இன்று சங்கரன்பந்தலில் உள்ள செல்போன் கோபுரத்தில் மனுக்களை தொங்கவிட்டு அதற்கு மாலை அணிவித்து, செல்போன் கோபுரத்தில் மீது ஏறி தலைகீழாக நின்று சிரசாசனம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நான்கு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்த நிலையில் அப்பகுதியில் பொதுமக்களும் இளைஞருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்ததை அடுத்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன் செல்போன் டவரில் இருந்து கதிரவன் கீழே இறக்கினர்.
இதனை அடுத்து 4 நான்கு மணி நேரத்துக்கு பிறகு நூதன போராட்டமானது தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்றும் கதிரவன் எச்சரிக்கை விடுத்து சென்றார் . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்