திருவாரூர் மாவட்டம் ஏழைகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை நிலவியதால் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எளிதாக பெற்றுக் கொள்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு நிர்ணயம் செய்த தொகையினை தனியார் இ-சேவை மையங்களில் செலுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் விளமல் பகுதியில் இயங்கி வரும் அன்னை சிஸ்டம்ஸ் என்கிற தனியார் இ-சேவை மையத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் விதவை சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு நிர்ணயித்த தொகையான 60 ரூபாயை விட அதிக தொகை வசூலிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் வந்ததையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிரடியாக அன்னை சிஸ்டம்ஸ் தனியார் இ-சேவை மையத்தில் நுழைந்து சோதனை நடத்தினார்.
இதில், அந்த தனியார் இ-சேவை மையத்தில் எந்த சேவைக்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்கிற உரிய அறிவிப்பு பலகை ஏதும் இல்லை. மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்தார். அங்கு சான்றிதழ் விண்ணப்பிக்க வந்திருந்த பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் தலைமையில் இந்த தனியார் இ-சேவை மையத்தில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் வசூலிக்கப்படும் தொகை குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உரிய விசாரணைக்கு பின் இந்த தனியார் இ-சேவை மையம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து இ-சேவை மையங்களும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற விண்ணப்பிப்பதற்கு அறுபது ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ளது. நான் சில தனியார் இ-சேவை மையங்கள் அரசு நிர்ணயித்த தொகையை விட அதிக தொகை வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. குறிப்பாக விளம்பர பகுதியில் இயங்கி வரும் இந்த அன்னை சிஸ்டம்ஸ் தனியார் இ சேவை இணையத்தில் அரசு நிர்ணயித்த தொகை விட அதிக தொகை வசூலிப்பதாக வந்த புகாரையடுத்து தற்போது இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் சான்றிதழ்களை விண்ணப்பிப்பதற்கு அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு என்பதை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்