தஞ்சாவூர்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சுற்றுலா அமைச்சகம், தமிழக அரசு சுற்றுலாத்துறை மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.


சர்வதேச யோகா தினம்


யோகா என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பழங்கால உடல், மன மற்றும் ஆன்மீக பயிற்சியாகும். உலகளாவிய வேண்டுகோளை அங்கீகரித்து, 11 டிசம்பர் 2014 அன்று, ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் மூலம் ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.


சர்வதேச யோகா தின வரைவுத் தீர்மானம்


யோகா பயிற்சியின் பல நன்மைகள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை சர்வதேச யோகா தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்வதேச யோகா தினத்தை நிறுவுவதற்கான வரைவுத் தீர்மானம் இந்தியாவால் முன்மொழியப்பட்டது மற்றும் 175 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. பொதுச் சபையின் 69 வது அமர்வின் தொடக்கத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்த திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தினார்.


இன்று சர்வதேச யோகா தினம்


அந்த வகையில் இன்று சர்வதேruச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தஞ்சையில் பெரிய கோயில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச யோகா தின பொதுவான யோகா நெறிமுறையின் படி யோகா பயிற்றுனர் யோகானந்த் வழிகாட்டுதலில் அனைவரும் 40 நிமிடங்கள் யோகா செய்தனர். 


கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு


டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி,  கிங்ஸ் பொறியியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, குயின்ஸ் மகளிர் கல்லூரி, ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரி, பயோ கேர் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் யூத் ரெட்கிராஸ் சார்ந்த 1000 மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.


யோகா பயிற்சி தொடக்கம்


சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குனர் வேல்முருகன் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் மாநகர நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துக்குமார், இந்திய சுற்றுலா சென்னை அலுவலகத்தைச் சார்ந்த சுற்றுலா தகவல் அலுவலர்கள் ராஜ்குமார், கோபிநாத், லலிதா குமாரி மற்றும் நிக்சன், ஹரிபாபு, மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


யோகாசனம் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் உறுதியளிப்பதாகவும் ஒவ்வொரு யோகாசனமும் ஒவ்வொரு நோய்களுக்கு தீர்வாக அமைவதால் அனைவரும் யோகா செய்து தங்களது உடல் மன வலிமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.