தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மதியம் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதனால் உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. முகாமிற்கு வந்த மக்கள் இதனால் அவதியடைந்தனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, தஞ்சாவூர் மாவட்ட மையம் சார்பில், 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து இன்று வியாழக்கிழமை மதியம் 3 மணி முதல் மாவட்டம் மற்றும் வட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தின.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்.
அனைத்து காலி பணியிடங்களையும் காலம் முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது, களப்பணியாளர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிப்பது போன்ற, நடவடிக்கைகளை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும்.
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பை ஏற்கனவே இருந்தது போல் 25 சதவீதமாக ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் வெளி முகமை, ஒப்பந்தம், தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதேபோல் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயதுரை தலைமையில் வட்டாட்சியர் நிலை முதல் கிராம உதவியாளர்கள் வரை 27 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும், கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.