தஞ்சாவூர்: ரெயிலில் நகைகள் அணிந்து கொண்டு ஜன்னல் அருகே உட்காரும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தீபாவளி பண்டிகை வரும் 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் கல்வி மற்றும் வேலைக்காக சென்றவர்கள் சொந்து ஊருக்கு திரும்பி வருகின்றனர். பெரும்பாலும் ரெயில் பயணத்தையே அனைவரும் விரும்புவதால் ரெயில் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதனால் ரெயில்களில் செல்லும் பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல கூடாது என்பதை அறிவுறுத்தி கும்பகோணம் ரெயில் நிலையத்தில் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் இருப்பு பாதை போலீசார் பயணிகளிடம் விழிப்புணர்வு செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். தொடர்ந்து அவர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- ரெயிலில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லகூடாது. விதிகளை மீறி கொண்டு சென்றால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பெண்களுக்கு என்று தனியாக ரெயிலில் பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் ஏதேனும் ஆண் நபர் ஏறினால் உடனே ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட வேண்டாம். ஜன்னல் அருகே அமர்ந்து இருக்கும் பெண்கள் தாங்கள் அணிந்து இருக்கும் நகை பாதுகாத்து கொள்ள வேண்டும். முடிந்த வரை இரவு நேரங்களில் ஜன்னல்களை மூடிவிட்டு தூங்க வேண்டும்.
கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை பார்த்தால் அதை தொடவோ, எடுக்கவோ வேண்டாம். ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். படிகட்டு அருகே அமர்ந்திருப்பவர்கள் கவனமாகவும், படிக்கட்டில் அமராமலும் இருக்க வேண்டும் என்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருப்பு பாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்வேலன், தனலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தலமை காவலர் ராஜசேகரன், ரெயில்வே பாதுகாப்பு படை துணை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், தலைமை காவலர் மதியழகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.