மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்: அனைத்து மாநில கட்சிகளையும் தடை செய்ய டெல்லி முடிவெடுத்தபோது இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் தங்கள் கட்சியின் பெயரை மாற்றிக்கொண்டனர். அப்போது அதிமுக பெயரை அஇஅதிமுக என எம்ஜிஆர் மாற்றினார்.




ஆனால், அப்போதும் பெயரை மாற்றாமல் தொடர்ந்து இப்போது வரை செயல்பட்டு வரும் ஒரே கட்சி திமுக மட்டுமே. 1992 -இல் மீண்டும் திமுகவுக்கு சோதனை வந்தது. அப்போது பேராசிரியர் அன்பழகன் மட்டும் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஒரு கையெழுத்திட்டு இருந்தால் இன்று திமுக என்ற கட்சியே இருந்திருக்காது. இப்படி எல்லா சூழ்நிலையிலும் கலைஞருடன் தோளோடு தோல் நின்று திமுகவை காப்பாற்றியவர் பேராசிரியர் அன்பழகன் என அக்கூட்டத்தில் பேராசிரியருக்கு புகழாரம் தெரிவித்து பேசினார்.




குத்தாலம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த முகாமில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.


தமிழக அரசின் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டுகளுக்கு 12 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா நாற்பது லட்ச ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றியம் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் கிராம ஊராட்சிகள் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை வசதி, இடுகாடு வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், குளங்களுக்கு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட திட்ட அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர், வட்டார வளர்ச்சிப் பணிகள் ஆணையர், சுகாதாரத்துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை, கால்நடை துறை உள்ளிட்ட 16 துறை அலுவலர்கள் கிராம மக்களுடன் கலந்துரையாடி பணிகளை தேர்வு செய்வது வழக்கம். 




அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் முகாம் நடைபெற்றது. பூம்புகார்  சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர், வேளாண் துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு சட்ட‌மன்ற உறுப்பினரிடம் குடிநீர் வசதி, சாலை வசதி, மின் இணைப்பு வசதி, இடுகாட்டு வசதி ஏற்படுத்திதர வேண்டி 50 க்கும்‌ மேற்பட்ட கிராம மக்கள் மனுக்களை அளித்தனர்.




மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். 


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கலைவாணன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.




தொகுப்பூதிய ,மதிப்பூதியம், சிறப்பு காலம்முறை ஊதியம் மற்றும் தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர் ஆகியோருக்கு காலமறை ஊதியம் வழங்க வேண்டும் , சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் ,காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 400 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.