நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466ஆம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு நாகை யாஹூசைன் பள்ளி தெரு வாசலில் இருந்து துவங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, ஊர்வலத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நாகை எஸ்பி ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தன கூட்டின் மீது வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மும்மதத்தினரும் பூக்களை தூவி வழிபட்டனர்.
இசை நடனத்துக்கு ஏற்றவாறு கோலாட்டம் , தாரைதப்பட்டைகள், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் நடனமாடி இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர். சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்ஹா வந்தடைந்தது. அப்போது சந்தன கூட்டில் இருந்து சந்தனக்குடம் இறக்கப்பட்டு ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. இதில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்ட காவல்துறை சார்பாக 1050 காவலர்கள் , 150 ஊர்க்காவல்படை வீரர்கள் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.