வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகம் 60% முதல் 70% வரை மழை பொழிவை பெறுகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை தொடங்குவதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் முடுக்கி விட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தஞ்சாவூர், கல்லணை கால்வாயில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்றுவது எப்படி என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ரயில்வே பாலத்தில் இருந்த தேங்கியிருந்த மழை நீருக்குள்,  காரில் சென்ற மருத்துவர் சிக்கி உயிரிழந்தார். மேலும், துார் வாராத வடிகால் வாய்க்காலில், கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு வைரஸ்  காய்ச்சல்கள் உருவாகுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும், பருவ மழையை சமாளிக்கவும், கொசுக்களின் உற்பத்தியை குறைக்கவும், மழை நீர் தேங்காமல் இருக்கவும், போர்கால அடிப்படையில் பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 




தொடர்ந்து, தஞ்சாவூரில் சில மணி நேரம் மழை பெய்தால், பழைய, புதிய, தற்காலிக பஸ்நிலையம், கீழவாசல், தஞ்சாவூர் மெயின் ரோடு, கரந்தட்டான்குடி, கொடிமரத்துமூலை, தேரோடும் ராஜவீதிகள், சீனிவாசபுரம் உள்ளிட்ட 51 வார்டுகளில், குண்டு குழியுமான சாலைகளில்   மழை நீர் தேங்கி நிற்கும். இதனால் சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் , குழியாக உள்ள பகுதியிலுள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகி வந்தனர். மழை நீர் வடியாததற்கு காரணம், தஞ்சாவூர் மாநகரப்பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் துார்ந்தும், ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, தஞ்சாவூர் மாநகரப்பகுதிகளில் உள்ள அனைத்து மழை நீர் வடிகால் வாய்க்கால்களை உடனடியாக, 6 வாரத்திற்குள் துார் வார வேண்டும், என மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலீவர், அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு, தஞ்சாவூர் மாநகரப்பகுதியான கரந்தட்டான்குடி, சருக்கை, தஞ்சாவூர் மெயின் ரோடு, அரசு போக்குவரத்து கழக பணிமனை, கீழவாசல், புதிய,பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட மாநகரப்பகுதியான 51 வார்டுகளில் மழை நீர் வடிகால் வாய்க்கால் பகுதியை, 5 க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.




இதனால் சாலையில் தேங்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாவது தடுக்கப்படுவதால், சிக்குன் குன்யா, டெங்கு, நிபா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் வராமல் பாதுகாக்கப்படும். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர், கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளதால், வடிகால் வாய்க்கால் பகுதியை, யாரும் மண் மற்றும் குப்பைகளை கொட்ட கூடாது, ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது, தற்போது போர்கால அடிப்படையில் வடிகால் பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் துார் வாரம் பணி நடைபெறுவதால், சாலைகள், தெருக்கள், சந்துகளில் மழை நீர் தேங்காதவாறு அலுவலர்கள், கண்காணிக்க வேண்டும். மழை நீர் தேங்காமலும், சுகாதாரமாக இருக்கவும், சுகாதாரத்துறையினர் தீவிரப்பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.