தஞ்சாவூர் மாவட்டம், மடிகை, கோவிலுார், மேலஉளூர், ஆழிவாய்க்கால், சூரக்கோட்டை, பொய்யுண்டார்கோட்டை, தென்னமநாடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 12 ந்தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்ட நிலையில், ஆற்று தண்ணீர் மற்றும் மின் மோட்டார் தண்ணீரை கொண்டு, கடந்த ஜூன் மாதம் விதை தெளித்து, 30 நாட்களுக்கு பிறகு, நாற்று பறித்து வயல்களில் நடவு செய்துள்ளனர். அனைத்து குறுவை சாகுபடி நெற்பயிரும், சூல் பருவம் எனும் பால் பருவத்தில் இருக்கும் நிலையில், தற்போது பல நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் அனைத்து நெற்பயிர்களும், சாய்ந்துள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் முழ்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை பணிகள் பாதித்துள்ளது, கடந்த ஆண்டை போல் நெற்கதிர்கள், சாய்ந்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகளை பாதுகாக்க முடியும்.
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் சூரக்கோட்டை, பொய்யுண்டார்கோட்டை, காட்டூர், வாண்டையார் இருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரம் ஏக்கர் குறுவை நெல் மணிகள் சாய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் குறுவை நெல் மணிகளுக்கு ஈரப்பத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்டும், அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல், தஞ்சாவூர் மாவட்டத்தில், பெரும்பாலான கிராமங்களில் குறுவை நெற்பயிர்களின், அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக பல பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
ஆனால், திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களும் முழுமையாக இயங்கவில்லை. அலுவலர்கள், சாக்குகள், பணியாளர்கள் போதுமான இல்லாததால், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை, கொள் முதல் நிலையத்தின் முன்பு கொட்டி வைத்து, காத்திருக்கின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது இந்த மழையினால் அறுவடை செய்த நெல் மணிகள் நனைந்து முளைத்து விட்டது. இதனால் நாற்றுக்கள் முளைத்த நெல்மணிகள் பதறாகி விடுவதால், விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 15 நாட்களாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகள், மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை முழுவதுமாக கொள்முதல் செய்யப்பட வில்லை. கடந்த சில நாட்களாக குறைந்தளவில் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. பகல் நேரத்தில் வெயில் அடிக்கும் பொழுது ஈரமான நெல் மணிகளை பரப்பி வைத்து காய வைத்து வருகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் பெய்யும் மழையினால், சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மீண்டும் நனைந்து விடுகிறது. இந்நிலையில், இரண்டு நாட்களாக விடுமுறை என்பதால், தேங்கி கிடக்கும் நெல்மணிகள், மழையினால் முளைவிட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
தமிழக அரசு, மழையினால் பாதித்த குறுவ சாகுபடி வயல்களை, அதிகாரிகள் பார்வையிட்டு, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து நெல் மணிகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் நிலங்களுக்கே சென்று நெல்மணிகளில் கொள்முதல் செய்ய வேண்டும். தினமும் மழை பெய்து வருவதால் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 20 அல்லது 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஆயிரம் மூட்டை முதல் 2000 முட்டைகள் வரை கொள்முதல் செய்தால் தான் மழையில் நெல்மணிகள் நனைவதை தடுக்க முடியும். குறுவை அறுவடை பணிகள் முடியும் வரை, கொள் முதல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க கூடாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.