டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேற வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழுவினர் திருவாரூரில் போராட்டம் நடத்தினர்.


திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விளை நிலங்களில் குழாய் பதித்து ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் விவசாய நிலங்களுக்கு அடியில் குழாய் பதிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு விவசாய நிலம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. ஆகையால் ஓஎன்ஜிசி நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் இனிவரும் காலங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய எண்ணை கிணறுகள் அமைக்க அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் புதிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் மீண்டும் விவசாயிகள் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் ஒஎன்ஜிசி நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளியேற வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர். 




இவர்களது போராட்டத்தில் தமிழக அரசு புதிய எண்ணை எரிவாயு கிணறுகள் தோண்டவும் பழைய செயல்படாத கிணறுகளை புதுப்பிக்கவும் அனுமதிக்க கூடாது, தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இன்றி தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் எரிவாயு கிணறுகளை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக மூட வேண்டும். மேலும் பணி இழக்கக்கூடிய எண்ணெய் எரிவாயு நிறுவன பணியாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் புதிதாக எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்களை பதிக்க கூடாது. ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களை முறைப்படி பராமரிக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சூழ்நிலை பாதிக்காத வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டும் தொழில்கலை துவங்கி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இதுகுறித்து காவிரி மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ் தேசிய பேரியக்க நிறுவனருமான மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் மராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. அதனை ஏற்றுகொண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெரியகுடி எண்ணெய் கிணறை செயல்படுத்துவதற்கு தடை விதிக்க உத்தரவிட்டிருக்கிறார். மீண்டும் மூடிய எண்ணெய் கிணறுகளை புதுப்பிக்கிறோம் என்ற சூழ்ச்சியோடு ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி இறங்குகிறது என நாங்கள் புரிந்து கொள்கிறோம். காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைக்கே முக்கியத்துவம் என்கிற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓஎன்ஜிசிக்கு வாழ்த்துப்பாடி கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த வாரம் திருவாரூரில் கண்டன பேரணி நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் எந்த வித நியாயமும் இல்லை. பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். லட்சக்கணக்கான விவசாய மக்களின் வாழ்வு என்னாவது. பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கேட்க வேண்டும். இந்த பேரணியை நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாலி போன்றவர்கள் இதனால் என்ன பாதிப்பு இருக்கிறது என்று கேட்கிறார்கள். திருவாரூர் முழுவதும் நிலத்தடி நீர் குறைந்திருக்கிறது. குடிநீர் மாசுபட்டு இருக்கிறது. விவசாயத்திற்கு இதைவிட வேறு என்ன பாதிப்பு வேண்டும். இங்கு வசித்துக் கொண்டு அவர்கள் என்ன பாதிப்பு இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதேபோன்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இதுகுறித்து ஏன் வாய் திறக்கவில்லை அமைதியாக இருக்கிறார்கள். திராவிட முன்னேற்ற கழகம் இதுபற்றி என்ன கூறுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்கமாக அறிக்கை விட வேண்டும். அனைத்து மக்களும் போராடி இதனை நிறுத்த வேண்டும் எரிவாயு வேண்டுமென்றால் மாற்று வழியை தான் பின்பற்ற வேண்டும் தவிர இதை செயல்படுத்தக் கூடாது என்று அவர் கூறினார்.