தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருச்சி – நாகை தேசிய நெடுஞ்சாலையில் கிரீன் சிட்டி பகுதியில் இறந்து கிடந்த ஆண் புள்ளிமான் உடலை வனத்துறை அதிகாரிகள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். புள்ளிமான் ஒன்று சாலையோரம் இறந்து கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

தஞ்சாவூர் அருகே திருச்சி- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கிரீன் சிட்டி பகுதியில் சாலையோரம் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்த புள்ளிமான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரெட்டிப்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையோரம் புள்ளிமான் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து தஞ்சை வனச்சரக அலுவலர் ரஞ்சித் கூறியதாவது: சாலையோரம் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரெட்டிப்பாளையம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். இறந்து கிடந்தது ஆண் புள்ளிமான். சுமார் 3 முதல் 4 வயது இருக்கலாம். வாகனம் ஏதாவது மோதி இறந்ததா? அல்லது ஏற்கனவே விஷ ஜந்துகள் கடித்து இறந்ததா என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும். புள்ளிமான்களை பொறுத்தவரை தோப்பு, வயல் போன்ற பகுதிகளிலும் வசிக்கும் தன்மை கொண்டவை. சற்று அதிகம் புதர்கள் இருந்தால் அதில் வசிக்கும். 

Continues below advertisement

தஞ்சை மாவட்டத்திற்கு அருகே புதுக்கோட்டை மாவட்டம் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுகள் பரந்து விரிந்துள்ள பகுதியாக அன்னவாசல் அருகேயுள்ள நார்த்தாமலை விளங்குகிறது. 700 எக்டேர் பரப்பளவில் உள்ள இந்த பரந்து விரிந்த வனப் பகுதிகள் காப்பு காடுகள் என்று அழைக்கப்படுகிறது. இங்கு முயல், நரி, மயில், மான், உடும்பு போன்றவை காணப்படுகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புகள், பண்ணைகள் அதிகம் உள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள புள்ளிமான்கள் உணவு தேடி தஞ்சை பகுதிக்கும் வந்து விடுகின்றன. இந்த புள்ளிமான் உணவு தேடி இங்கு வந்து இருக்கலாம். ஆனால் இந்த புள்ளிமான் எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனையின் முடிவு இது தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மான்கள் வாழ்வதற்கு காடுகள் நிறைந்த இயற்கை சூழல் மிகவும் சிறந்தவை. காடுகள் மான்களுக்கு உண்ணவும், ஓய்வெடுக்கவும், வெளியேறவும், குட்டிகளை வளர்க்கவும் சிறந்த இடமாக உள்ளது. அனைத்து விலங்குகளையும் போலவே, மான்களுக்கும் அவற்றின் உண்மைக்கு அடிப்படையான குறிப்பிட்ட வாழ்க்கைத் தேவைகள் உள்ளன. ஆண் மான் பொதுவாக 'பக்' என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெரிய ஆண் மான் பல சமயங்களில் 'ஸ்டாக்' என்று அழைக்கப்படுகிறது. பெண் மான் பொதுவாக 'டோ' என்று அழைக்கப்படுகிறது.

மான்கள் அசாதாரணமான பலவகையான தாவரப் பொருட்களை சாப்பிடும். இவற்றிற்கு தோப்புகள், பண்ணைகள், மரங்கள் அடர்ந்த பகுதி, வயல்கள் செடிகள், கொடிகள் அடர்ந்த பகுதிகள் போன்றவற்றில் வாழும் தன்மை கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. தண்ணீர், உணவு தேடி இவை காட்டுப்பகுதியில் இருந்து வெளி வந்து நாய்கள் மற்றும் வாகனங்களில் சிக்கி இறந்து விடும் சம்பவங்களும் நடக்கிறது.