தஞ்சாவூர்: திருட்டு வழக்குகளில் ஈடுபட முன்னேற்பாடுகளுடன் இருந்த 7 பேர் கொண்ட கும்பலை வளைத்து பிடித்து முன்னெச்சரிக்கையாக திருவையாறு போலீசார் அதிரடியாக  கைது செய்தனர். இதையடுத்து இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் பாராட்டினார்.


தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும்  சுழற்சி அடிப்படையில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 16.11.2024-ம் தேதி திருவையாறு உட்கோட்டம் மருவூர் காவல் நிலைய சாகத்திற்குட்பட்ட வடுகக்குடி முனியாண்டவர் கோவில் பகுதிகளில் அடையாளம் தெரியாத 7 நபர்கள் கொண்ட கும்பல் ஆச்சனூர் பகுதியில் உள்ள நகை அடகு கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


இதையடுத்து சந்தேக நபர்களை கணிகாணித்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் திருவையாறு வடுகக்குடியை சேர்ந்த தினேஷ் (19), ஆந்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விக்கி (21), மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த வீரமுத்து (26), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (43) மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த அழகர் (38), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா(35) மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் (41) ஆகியோரை திருவையாறு டிஎஸ்.பி, அருள்மொழி அரசு உத்தரவின்படி திருவையாறு இன்ஸ்பெக்டர் சர்மிளா  மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் அடங்கிய குழுவினர் மேற்கண்ட  7 பேரையும் கைது செய்தனர்.


அவர்களிடம்  போலீசார் மேற்கொண்ட விசாணையில் மருவூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி வந்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 7 பேர் மீதும் மருவூர் போலீசில் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த திருவையாறு டிஎஸ்.பி, இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்பு தனிப்படை பிரிவினை மாவட்ட எஸ்.பி., வெகுவாக பாராட்டினர்.


தஞ்சை மாவட்டத்தில் எஸ்.பி. ஆஷிஷ்ராவத் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிரமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முக்கியமாக புகையிலைப் பொருட்களை தடுக்க தீவிர சோதனையும் நடந்து வருகிறது. போலீசாரின் இந்த கடும் நடவடிக்கையால் திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது என்று பொதுமக்கள் தரப்பிலும் தெரிவிக்கின்றனர். பைபாஸ் சாலைகளில் நடந்து வரும் வழிப்பறி போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ரோந்து பைக்குகளில் போலீசார் அடிக்கடி சோதனை பணி மேற்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதேபோல் மோசடி வழக்குகள், வழிப்பறி சம்பவங்கள் போன்ற புகார்களின் பேரில் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத்தின் அதிரடி உத்தரவின் பேரில் ஓரிரு நாட்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த அதிரடி சோதனை மற்றும் வழக்குகளில் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவது போன்ற போலீசாரின் துரித நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.